திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அதிமுக ஊராட்சிமன்ற தலைவர் சினிமா பாணியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டக்கரை ஊராட்சிமன்ற தலைவராக இரண்டாவது முறையாக தேர்வானவர் மனோகரன்.
இவர் அதிமுகவின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளராக பொறுப்பில் இருந்து வந்தார். ஞாயிறு மாலை குருவிமேடு பகுதியில் உள்ள சுபநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு தமது மனைவி, மகன்களுடன் மனோகரன் தானே காரை ஓட்டி கொண்டு வந்துள்ளார். அப்போது எதிரே வந்த லாரி ஒன்று மனோகரனின் காரின் மீது பலமாக மோதியுள்ளது.
இதில் முன்பக்கம் பயங்கரமாக நசுங்கி நிலைகுலைந்த கார் சாலையோர பள்ளத்தில் சிக்கிய நிலையில் மனோகரன் காரில் இருந்து கீழே இறங்க முற்பட்டுள்ளார். அப்போது லாரியில் இருந்து வந்த மர்ம கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் மனைவி, குழந்தைகள் கண்முன்னே மனோகரனை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளது.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய மனோகரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சடலத்தை கைப்பற்றிய மீஞ்சூர் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஊராட்சிமன்ற தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் பொன்னேரி – திருவொற்றியூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது ஊராட்சியில் உள்ளவர்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும் கேட்காமலே வந்து உதவி செய்து வந்தவர் எனவும், தங்களது கிராமத்தில் உள்ள தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வாங்கி கொடுத்த ஊராட்சி மன்ற தலைவரையே கொலை செய்துள்ளனர் என்றும் கொலையாளிகளை கைது செய்யாவிடில் சாலை மறியல் போராட்டத்தை கைவிடமாட்டோம் என தெரிவித்தனர்.
கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மீஞ்சூர் காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் காரணமாக சுமார் 1மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர் மனோகரன் ரியல் எஸ்டேட் தொழில், ஒப்பந்த பணிகள் என செய்து வந்த நிலையில் தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்துள்ளதா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமா என காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு தொடர்பாக நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு தகராறு ஏற்பட்டதில் மீஞ்சூர் காவல்துறையினர் 4பிரிவுகளில் ஊராட்சிமன்ற தலைவர் மனோகரன் மீது வழக்கு பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாக துணை ஆணையர் தலைமையில் 2உதவி ஆணையர்கள், 4ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஊராட்சிமன்ற தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.