மக்களை குழப்பி அரசியலில் ஆதாயம் பெற ஸ்டாலின் முயற்சிக்கிறார்- முதல்வர்
திமுக தலைவர் ஸ்டாலினை அவரது தந்தையே நம்பாமல், அவருக்கு தலைவர் பதவியை கொடுக்கவில்லை என்றும் அப்படி இருக்கையில், மக்கள் எப்படி நம்புவர் எனவும் முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக.,விற்கு மக்கள் செல்வாக்கு இல்லை, இந்த தேர்தலுடன் காணாமல் போகும் என ஸ்டாலின் பேசி வருகிறார்.
இந்த கட்சி, உழைக்கும் கட்சி, நாட்டு மக்களின் செல்வாக்கு பெற்ற கட்சி. இந்த தேர்தல் திமுக.,விற்கு இறுதி தேர்தலாக அமையும். நான் கிளைச்செயலராக இருந்து மக்களின் ஆதரவுடன் முதல்வர் ஆகியுள்ளேன். ஆனால், ஸ்டாலின் அவரது அப்பா கருணாநிதியின் செல்வாக்கால் எம்எல்ஏ.,வாக உள்ளார்.
கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் பேச முடியாத சமயத்தில் கூட ஸ்டாலினுக்கு திமுக தலைவர் பதவியை கொடுக்கவில்லை, செயல்தலைவர் பதவி தான் கொடுத்தார். ஸ்டாலினை அவரது தந்தையே நம்பாதபோது மக்கள் எப்படி நம்புவர். உழைக்கும் அதிமுக ஏற்றம் காண்கிறது, உழைப்பே இல்லாத திமுக சரிவை சந்திக்கிறது. மக்களை குழப்பி அரசியலில் ஆதாயம் பெற ஸ்டாலின் முயற்சிக்கிறார்.
நான் முதல்வர் ஆனபோது நிம்மதியாக இருக்கவிடாமல் தொந்தரவு செய்தனர். ஆனால், அனைத்தும் முறியடிக்கப்பட்டன. இது மக்கள் கட்சி. மத்தியிலும், மாநிலத்திலும் அதிகாரத்தில் இருந்து கொள்ளையடித்த குடும்பம் தான் கருணாநிதியின் குடும்பம்.
இவ்வாறு அவர் பேசினார்.