என்னை தளபதியாக்கியது ரசிகர்கள்தான். நான் தளபதியாக இருக்க வேண்டுமா அல்லது தலைவனாக மாற வேண்டுமா என்பதை ரசிகர்களும், காலமும்தான் முடிவு செய்யவேண்டும் என தொலைக்காட்சி பேட்டியில் நடிகர் விஜய் கூறியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இந்தப் படம் வரும் 13-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. வழக்கமாக விஜய் படங்களுக்கு மிகப்பெரிய அளவில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறும். அந்த நிகழ்ச்சியின்போது விஜய் பேசும் விவகாரம் அரசியல் களத்தில் பேசுபொருளாவது வழக்கம்.

இந்தமுறை ஆடியோ வெளியீட்டு விழா வைக்காத விஜய்யின் ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாகியது. அதன் காரணமாக விஜய் சன் டிவியில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர்  விஜய் தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் நெல்சன் நெறியாளராக இருந்து கேள்விகளை கேட்டார்.

சன் தொலைக்காட்சியில்  இன்று இரவு 9 மணிக்கு வெளியான பேட்டியைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த பேட்டியில் இயக்குநர் நெல்சனின் கேள்விகளுக்கு பதிலளித்த விஜய், ‘நான் இயல்பாகவே கோபம், வருத்தம் போன்ற உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்துவதில்லை. என், நெருக்கமானவர்களும், நான் உணர்வுகளை வெளிப்படுத்துவதில்லை என்று தெரிவித்துள்ளனர். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலுக்கு சென்றுள்ளேன். கத்தி படத்தின்போது மசூதிக்கு சென்றுள்ளேன். என் அம்மா இந்து, அப்பா கிறிஸ்தவர். அதனால் நான் சிறுவயதிலிருந்தே அப்படிதான்.

எனக்கு குறிப்பிட்ட மதம்தான் என்றில்லை. ஜார்ஜியா சென்றிருந்த நேரத்தில் நாம் தங்கியிருந்த இடத்துக்கு அருகில் சர்ச் இருந்தது. அதனால், அங்கு செல்லவேண்டும் என்று விரும்பினேன். நாம் ஒரு மரத்தைப் பார்க்கிறோம். அதில் எல்லோருக்கும் பூக்கள் மட்டும்தான் தெரியும். ஆனால், வேர் தெரியாது. அப்பாக்கள் ஒரு குடும்பத்தின் வேர். கடவுளுக்கும் அப்பாவுக்கும் உள்ள வேறுபாடு. கடவுள் கண்ணுக்கு தெரிய மாட்டார். அப்பா கண்ணுக்குத் தெரிவார். சஞ்சய் நடிப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் அவனது முடிவில் தலையிடுவதில்லை.

ஒருமுறை, அல்போன்ஸ் புத்திரன் என்னைப் பார்ப்பதற்கு நேரம் கேட்டிருந்தார். எனக்குதான் கதை சொல்லப் போகிறார் என்று நினைத்தேன். ஆனால், அவர் சஞ்சய்க்கு கதை கூறினார். அந்தக் கதையில் சஞ்சய் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், சஞ்சய் இரண்டு ஆண்டு காலம் வேண்டும் என்று நடிக்க மறுத்துவிட்டார். என்னை தளபதியாக்கியது ரசிகர்கள்தான். நான் தளபதியாக இருக்க வேண்டுமா அல்லது தலைவனாக மாற வேண்டுமா என்பதை ரசிகர்களும், காலமும்தான் முடிவு செய்யவேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் இயக்கப் பிரதிநிதிகளுக்கு வாழ்த்து தெரிவித்துகொள்கிறேன். அவர்கள் எனது புகைப்படத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்டார்கள். என் படம் பயனுள்ளதாக இருக்கும் என்றால் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றேன். அரசியல் செய்திகளைக் கவனித்துவருகிறேன். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது எதர்த்தமாகவே சைக்கிளில் வாக்களிக்கச் சென்றேன். அதில் வேறு எந்த நோக்கமும் கிடையாது’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு நுழைய தான் இப்படி பேசி வருவதாக பலர் பதிவு செய்து வருகின்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here