புதுடில்லி:
இந்தியாவில், தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்து பகுதிகள் உள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மே.வங்கம், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, ராஜஸ்தான், ம.பி., மாநிலங்களிலும், அதிக விபத்து பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடக்கும் விபத்து காரணமாக 10 பேருக்கு மேல் பலியானால், அந்த இடம் விபத்துப்பகுதியாக குறிக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில், தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 500 மீட்டரிலும் குறைந்தது 5 விபத்துகள் நடந்துள்ளன.
31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கொடுத்த தகவல் அடிப்படையில், கடந்த 2015 முதல் 2019 வரை, இந்தியாவில், தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துப்பகுதிகள் என கண்டறியப்பட்ட 5,489 பகுதிகளில் 748 பகுதிகள் தமிழகத்தில் உள்ளது. யூனியன் பிரதேசங்களில் டில்லி முதலிடத்தில் உள்ளது.
அதேநேரத்தில், மஹாராஷ்டிராவில் 25, ஹரியானவில் 23, பீஹாரில் 92 பகுதிகளும் உள்ளதாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், அந்த தகவல் துல்லியமானதாக இல்லை. நேரில் சென்று பார்த்த போது, தேசிய நெடுஞ்சாலை அல்லாத பகுதிகளில் 380 விபத்து பகுதிகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
வழக்குப்பதிவான விபத்துகளை மட்டுமே வைத்து இந்த விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன ஆனால், சரியான தகவல்களை சேகரிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.
அதிக விபத்து பகுதி குறித்த தரவுகளை, கடந்த 2011ம் ஆண்டு முதல் சேகரித்து வரும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், 2011 முதல் 2014 வரை விபத்துகள் அடிப்படையில், 789 விபத்து பகுதிகளை கண்டுபிடித்தது.