கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பொன்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் இன்று காலை காட்டுக் கொள்ளை பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு பூஜை செய்வதற்காக தென்னந்தோப்பு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது தென்னந்தோப்பில் இரண்டு காட்டு யானைகள் நின்று கொண்டிருந்ததை பார்த்து அவர் தன்னிடம் இருந்த செல்போனில் செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளார்.
இதை பார்த்த காட்டுயானைகள் ராம்குமாரை துரத்தி உள்ளது. ராம்குமார் ஓட முடியாமல் தடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்த அவரை யானைகள் மிதித்து தாக்கியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் ராம்குமார் உடலை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை போலீசார் மற்றும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.