சென்னை கிழக்கு கடற்கரை சாலையை அடுத்த பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குழுவின் கான்சர்ட் நடைபெற்றது. ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி நடக்கவிருந்த இந்த கான்சர்ட் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் திட்டமிட்டபடி நேற்று நடைபெற்றது. கான்சர்டில் பங்கேற்க சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்தவர்கள் பனையூர் நோக்கிப் படையெடுத்தனர்.
இசை கச்சேரியை காண ஒவ்வொருவருக்கும் 2000 ரூபாய், 5000 ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் என அமர்வதற்கு ஏற்றார் போல் கோல்டன், சில்வர், பிளாட்டினம் என இருக்கைகளை வகைப்படுத்தி கட்டணம் வசூலித்ததாகவும், ஆனால், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இருக்கைகளை திட்டமிட்டபடி ஒதுக்கீடு செய்யவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் கான்சர்ட் நடைபெற்ற கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு வரிசை கட்டி நின்றன. இதனால், கிழக்கு கடற்கரை சாலையில் கான்சர்டில் பங்கேற்க வந்தவர்களுடன் சேர்ந்து பொதுமக்களும் பல மணி நேரம் வாகனங்களிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளான ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளது. கான்சர்டை காண வந்த ரசிகர்களுக்கு இருக்கைகள் கிடைக்காமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துள்ள அந்நிறுவனம் அதற்கான முழு பொறுப்பை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளது.