காரைக்குடி:
பிள்ளையார்பட்டி அருகே உள்ள சிறுகுடல் பட்டியை சேர்ந்தவர் கருப்பணன் மகன் பழனியப்பன் 44. காரைக்குடி பேரன்பட்டி அருகே உள்ள கேஸ் ஏஜென்சி ஒன்றில் வேலை செய்து வந்தார்.
இவர் இன்று மதியம் சங்கராபுரம் ஊராட்சி தந்தை பெரியார் நகர் ஒன்பதாவது வீதி வழியாக கேஸ் சிலிண்டர்களை பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள அவினா அப்பார்ட்மெண்டில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி பழனியப்பன் தலையில் விழுந்தது. இதில் பழனியப்பன் தலை மற்றும் கழுத்தில் கண்ணாடி துண்டுகள் வெட்டி பலத்த காயம் ஏற்பட்டது.
அப்பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பழனியப்பனை ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே பழனியப்பன் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த உதவி எஸ்பி ஸ்டாலின் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அப்பார்ட்மெண்டில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகள் அகற்றப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல், அவ்வழியாக சென்ற மாட்டின் மீது கண்ணாடி விழுந்து படுகாயம் அடைந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் அப்பார்ட்மெண்டில் இருந்த கண்ணாடிகள் அகற்றப்படாததே இந்த உயிரிழப்புக்கு காரணம் என புகார் எழுப்பி வருகின்றனர்.