சென்னை ராமாபுரம் திருவள்ளுவர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி தீமிதி திருவிழா நடைபெற்றது. தீமிதி திருவிழாவுக்காக ராமாபுரம் உதவி ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது திருவிழாவிற்கு வந்த நபர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 22 வயது பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெண் காவலர் உடனே சக காவலர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர், ராமாபுரபஜனை கோவில் தெருவை சேர்ந்த கார் மெக்கானிக் கண்ணன் என்பதும், அவர் திமுகவில் உறுப்பினராக இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து கண்ணன் மீது பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்தல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.