திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறாள். அவள், தனது தாய் மற்றும் தங்கையுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறாள். மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மாணவியை அவரது தாயார், அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றார்.

அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவள் 4 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார், மகளிடம் இதுபற்றி கேட்டார். அதற்கு மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் சிலர் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

இதுகுறித்து சிறுமியின் தாயார், ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர், தென்றல் நகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (34). இவருக்கு 2 மனைவிகள். இருவருமே கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து சென்று விட்டனர். வெங்கடேசன், தனது தாயார் விஜயா (65), அக்காள் லலிதா (36) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். வெங்கடேசன், 10-ம் வகுப்பு மாணவியை ஆசைவார்த்தை கூறி தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதற்கு வெங்கடேசனின் தாயார் மற்றும் சகோதரியும் உடந்தையாக இருந்துள்ளனர். மேலும் லலிதா தனக்கு தெரிந்த 3 ஆண்களையும் வீட்டுக்கு வரவழைத்து மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்திய அதிர்ச்சி தகவலும் வெளியானது. இதற்காக 3 பேரிடம் இருந்தும் ரூ.3 ஆயிரத்து 500 பணத்தை லலிதா பெற்றுள்ளார்.

இவர்கள் 4 பேரும் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததால் 16 வயது மாணவி கர்ப்பமானது தெரிந்தது. இதையடுத்து நேற்று காலை வெங்கடேசன், அவருடைய அக்காள் லலிதா, அவர்களது தாயார் விஜயா (65) மற்றும் அதே பகுதி காந்தி தெருவை சேர்ந்த வேங்கப்பன் (42) ஆகிய 4 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் 4 பேரையும் திருவள்ளூர் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள திருமுல்லைவாயல் சரஸ்வதி நகரை சேர்ந்த கிரி மற்றும் பட்டாபிராமை சேர்ந்த பாலாஜி ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here