அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள நியூபோர்ட் நியூஸ் என்ற நகரகத்தில் ரிச்நெக் என்ற தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 30 வயது மதிக்கத்தக்க ஆசிரியை ஒருவரை அங்கு படிக்கும் 6 வயது மாணவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டுள்ளான்.
இதில் படுகாயமடைந்த ஆசிரியை உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவனுக்கும் ஆசிரியைக்கும் வகுப்பில் வாக்குவாதம் நடைபெற்றதாகவும் அதைத் தொடர்ந்து இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவல்துறை அதிகாரி ஸ்டீவ் ட்ரூ கூறுகையில், சிறுவனின் கைக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்று தெரிவில்லை. இது விபத்தாக நடந்த சம்பவம் அல்ல. மாணவனை காவல்துறை பிடியில் வைத்து விசாரித்து வருகிறோம் என்றார்.
இந்த பள்ளியில் சுமார் 550 மாணவர்கள் படிக்கின்றனர். அங்கு இரும்பை கண்டறியும் கருவிகளை சோதனை செய்ய வைத்துள்ளனர். அப்படி இருந்தும் பள்ளிக்குள் துப்பாக்கி எப்படி வந்தது என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் பள்ளி மாணவர்களும் பெற்றோரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். எனவே, பள்ளிக்கு திங்கள் கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மனநல ஆலோசனை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
துப்பாக்கி கலாச்சாரம் மோசமாக உள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அந்நாட்டில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதால் துப்பாக்கி பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.