Thursday, July 18, 2024
Blog

கையும் களவுமாக சிக்கிய பெண் வட்டாட்சியர்!

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்குள்பட்ட தோட்டமூலா பகுதியைச் சோ்ந்தவா் உம்மு சல்மா. இவா், நிலம் மறுவரையறை தொடா்பாக வட்டாட்சியா் ராஜேஸ்வரியிடம் சென்றுள்ளாா். அப்போது, நிலம் வரையறை செய்துகொடுக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் உம்மு சல்மா புகாா் அளித்துள்ளாா்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் பரிமளா, உதவி ஆய்வாளா் சாதனபிரியா ஆகியோா், உம்மு சல்மாவிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வழங்கி வட்டாட்சியரிடம் கொடுக்கக் கூறியுள்ளனா். இந்நிலையில், உம்மு சல்மாவிடம் இருந்து வட்டாட்சியா் ராஜேஸ்வரி ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினா், அவரைக் கைது செய்தனா்.

 

TEENZ MOVIE REVIEW : டீன்ஸ் விமர்சனம் RATING 3/5

பள்ளியில் படிக்கும் சிறுவர்கள், வெளிநாடுகளைப் போல் நம் நாட்டிலும் பிள்ளைகளுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் எனத் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். அதனை நாமே கையில் எடுக்க வேண்டும் என எண்ணும் அந்தச் சிறுவர்கள் அவர்களுக்குள் உள்ள ஒரு பெண்ணின் சொந்த கிராமத்திற்கு ஸ்கூலை கட் அடித்து விட்டு செல்கின்றனர்.

அப்போது ரோட்டில் நடக்கும் போராட்டம் காரணமாக, பேருந்து செல்லாது என்று போலீசார் சொல்கின்றனர். பிறகு ஒரு ஆட்டோ டிரைவரும் கைவிரித்ததால், காட்டுப்பாதையைத் தேர்வு செய்து 13 பேரும் நடந்து செல்கின்றனர். அப்போது ஒருவர் பின் ஒருவராக மாயமாகின்றனர். இவர்களுக்கு உதவ பார்த்திபன் வருகிறார். ஏன் மாயமானார்கள்? பார்த்திபன் வந்து என்ன செய்தார்? என்பதே மீதி கதை.

13 சிறுவர்களை வைத்துக்கொண்டு அவர்களுக்குள் நடக்கும் ஹைடெக்காண பேச்சுகளும், அதற்கேற்ற அவர்களின் உடல் மொழிகளையும் வைத்துக்கொண்டு தன் திரைக்கதையை வித்தியாசமாக அமைத்து புதுவித அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் நடிகர் பார்த்திபன். 13 சிறுவர்களின் நடிப்பு சிறப்பு. இசை ஓகே. ஆனால் கிளைமேக்ஸ் காட்சி கொஞ்சம் சொதப்பல் மற்றும் கதையின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

டீன்ஸ்- சிறுவர், சிறுமியுடன் ஒரு முறை சுற்றி வரலாம்.  

 

இந்தியன் 2 திரை விமர்சனம் : தாத்தா வந்து செஞ்சிட்டாரு…. RATING 2.5/5

இந்தியன் 2 ஷங்கர் படம் என்ற பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் கதை வென்றதா? கொன்றதா? வாங்க பார்ப்போம்.   

தன் நண்பர்களுடன் ‘பார்க்கிங் டாக்ஸ்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை வைத்து சமூக பிரச்சினைகளுக்காக, குறிப்பாக ஊழலுக்கு எதிராக பேசி வருகிறார் சித்ரா அரவிந்தன் (சித்தார்த்). தன்னால் எவ்வளவு முயன்றும் ஊழலை தடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு தலைமறைவான சேனாபதி என்கிற ‘இந்தியன்’ தாத்தாவை (கமல்ஹாசன்) வரவழைக்க #ComeBackINDIAN என்ற ஹேஷ்டேகை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்கிறார்.

தைவான் நாட்டில் வர்மக் கலையை பயிற்றுவிக்கும் சேனாபதி இந்தியா திரும்பி வர போலீஸ் கண்ணில் மண்ணை தூவி விட்டு தொடர்ந்து ஊழலுக்கு எதிராக சில கொலைகளைச் செய்கிறார். இன்னொரு பக்கம் பாபி சிம்ஹா தலைமையிலான போலீஸ் குழு சேனாபதியை துரத்துகிறது. பிறகு என்ன நடந்தது என்பதே மீதி கதை…

சித்தார்த் நடிப்பு ஓகே. அம்மா செண்டிமெண்ட் கலங்க வைக்கிறது. கமலின் உடை, உடல் பாவானை நடிப்பு எல்லாம் சிறப்பு. சமுத்திரக்கனி, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், ரேணுகா, மனோபாலா, ஜெகன், பிரியா பவானி சங்கர், ரிஷி காந்த் ஆகியோர் நடிப்பு ஓகே. 

இந்தியன் 1 கதையில் உள்ள சுவாரஸ்யம், கதையின் வலிமை இந்தியன் 2 கதையில் இல்லவே இல்லை என்பதே பெரிய வருத்தம். வர்மக் கலையில் புதுமையை சேர்க்கிறேன் என்று வில்லன்களை பாட்டு பாட வைப்பது, ஆணை பெண் போல நடந்து கொள்ள வைப்பது, குதிரை போல ஓடச் செய்வது என காமெடி செய்திருக்கிறார்கள் படத்தில். அனிரூத் இசை இந்த படத்திற்கு ஒர்கவுட் ஆகவில்லை. அரசு இலவச மிக்சி, கிரைண்டர் கொடுப்பதை படத்தில் கொச்சைபடுத்தியிருப்பது தவறு என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர். 

இது ஒரு புறம் இருக்க மெட்ரோ ரெயிலை நம்ம தாத்தா பின் நோக்கி ஓட்டுவது எல்லாம் ரொம்ப ஓவர்…. தாத்தா ஏர்போர்ட் வரும் போதே CBCID பிடிக்க முடியாமல் தப்பித்து கடத்துவது எல்லாம் பழைய பட காட்சியப்பா… தாத்தா நடு ரோட்டில் யாரிடமும் சிக்காமல் சேஸிங் செய்யும் காட்சி எல்லாம் கொடுமையடா சாமி….  ஷங்கர் அய்யாவே… இந்தியன் 3 யில் கூடுதல் கவனம் செலுத்தி எடுத்தால் தங்கள் மீது நம்பிக்கை வைத்து வரும் ரசிகர்கள் ரசிப்பார்கள் இல்லையென்றால் கடையை மூடும் நிலைமை  வர வாய்ப்புள்ளது ஜாக்கிரதை அய்யா.

இந்தியன் 2- தாத்தா ரசிகர்களை கதரவிட்டு கலங்க வச்சிட்டாரு…..  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை: குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை: பெரம்பூரில் பரபரப்பு!

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூரில் வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இவரை வெட்டிவிட்டு தப்பியது. படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் கீரிம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

பின்னர் ஆம்ஸ்ராங்கின் உடல் உடற்கூராய்வுக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தகவல் அறிந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.

மருத்துவமனைக்கு வந்த இயக்குநர் பா.ரஞ்சித் ஆம்ஸ்ட்ராங் உடலைப் பார்த்து கதறி அழுதார். ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரணையில் இறங்கியுள்ளனர்.

மேலும் பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து கதறி அழுதபடி மருத்துவமனைக்கு ஓடி வந்தார் இயக்குநர் பா.ரஞ்சித். இயக்குநர் பா.ரஞ்சித், தலையில் அடித்தபடி கதறி அழுதார். இயக்குநர் பா.ரஞ்சித், பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கோடு நெருங்கிய நட்பும் அன்பும் கொண்டவர்.


 

மானிய தொகை பெற லஞ்சம் வாங்கிய திருவள்ளூா் மாவட்ட தொழில் மைய உதவியாளர்!

தமிழ்நாடு அரசு மானியத் திட்டத்தில் மானியத் தொகை பெற ரூ.2,500 லஞ்சம் பெற்ற திருவள்ளூா் மாவட்ட தொழில் மைய உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவள்ளுரைச் சோ்ந்த குமாரசாமி. இவா் மாவட்ட தொழில் மையத்தில் கடந்த 2022- ஆம் ஆண்டு வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மூலம் புத்தக நிலையம் வைக்க ரூ.2 லட்சம் கடன் பெற்றாராம். அதற்கான மானியம் ரூ.50,000 பெற மாவட்ட தொழில் மையத்துக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பாக சென்று ஆவணங்கள் அளித்துள்ளாா். அப்போது மானியத் தொகை பெற அலுவலக உதவியாளா் சிவக்குமாா் என்பவா் குமாரசாமியிடம் ரூ.2,500 லஞ்சம் கேட்டுள்ளாா்.

லஞ்சம் தர விரும்பாத குமாரசாமி திருவள்ளுா் லஞ்ச ஒழிப்பு துறையில் புகாா் செய்தாா். அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் அவரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனா். இந்த நிலையில் குமாரசாமியிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை லஞ்ச ஒழிப்புத் துறையினா் கொடுத்து அனுப்பினா்.

அலுவலக உதவியாளா் சிவக்குமாா் ரூ.2,500 லஞ்சப் பணத்தைப் பெற்ற போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறை துணை கண்காணிப்பாளா் ராமச்சந்திரா மூா்த்தி தலைமையிலான போலீஸாா் அவரை கைது செய்தனா்.

கள்ளகுறிச்சி கள்ளசாராயம் பலிக்கு ரூ10 லட்சம்: உயர்நீதிமன்றம் கேள்வி?!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு எப்படி வழங்க முடியும்? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கும் இழப்பீடுத் தொகை ரூ.10 லட்சம் என்பது அதிகம் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இழப்பீட்டுத் தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகையை எதிர்த்து முகமது கோஸ் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், கள்ளச்சாராயம் குடிப்பது சட்டவிரோதம். எனவே, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை பாதிக்கப்பட்டவர்களாகக் கருதக் கூடாது என்றும் தீ விபத்து உள்ளிட்ட இன்னல்களால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணமாக குறைந்த தொகை வழங்கும் நிலையில், கள்ளச் சாராயம் குடித்து பலியானவர்களுக்கு எந்த அடிப்படையில் அதிக நிவாரணம் வழங்கப்படுகிறது என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகளோ, சமூக சேவகர்களோ, சமூகத்துக்காக உயிர் தியாகம் செய்தவர்களோ அல்லாத நிலையில் அவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு, கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்துக்கு 10 லட்சம் இழப்பீடு என்பது அதிகம். இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், இந்தத் தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கடந்த 18 ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததில் பலருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சாராயம் குடித்தவா்களில் சிலர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், சிலா் சேலம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றியும் இதுவரை 64 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் சிகிச்சையில் உள்ளனர். இந்த விவகாரத்தில் 10க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் இந்த சம்பவத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கும் கூடுதல் நிவாரணங்களையும் அறிவித்திருந்தது.

கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது தொடர்பாக, விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் அமைப்புகள் சார்பில் கண்டனங்களும் பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டன. இந்த நிலையில்தான், இழப்பீடு தொகை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, விசாரணை தொடங்கியிருக்கிறது.

இந்த இழப்பீட்டுத் தொகை அல்லாமல், கள்ளச்சாராய பலி குறித்து பேரவையில் உரையாற்றியபோது, முதல்வர் ஸ்டாலின், கூடுதல் நிவாரணங்களையும் அறிவித்திருந்தார். அதாவது, கள்ளச்சாராய சம்பவத்தில் பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும்.

கள்ளச்சாராயம் குடித்து பெற்றோர்கள் இருவரும் இறந்திருந்தால், அவர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாவலர் பராமரிப்பில் வளர, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை மாத பராமரிப்புத் தொகையாக தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும்.

பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகையாக அவர்களின் பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிலையான வைப்புத் தொகையில் வைக்கப்படும். அவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் அந்தத் தொகை வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும்.

பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளுக்கு, அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளிலும் முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியத் திரையுலகின் முன்னணி மற்றும் மதிப்பிற்குரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனி, இணையற்ற பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்கியவர் மற்றும் தனித்துவமான கதைசொல்லலுக்கு பெயர் பெற்றவர்.

‘மங்காத்தா’ படத்தில் இணைந்து நடித்து ரசிகர்களுக்குப் பிடித்த காம்பினேஷனாக மாறிய நடிகர்கள் அஜித்குமார் – த்ரிஷா – ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மூவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் படத்தில்  இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, நிகில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைவர் ஜி.கே.எம். தமிழ் குமரன் கூறும்போது, “எங்கள் சிறப்பு தயாரிப்புகளில் ஒன்றான ‘விடாமுயற்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது முதல் ரசிகர்கள் இந்த படத்தின் மீது தங்கள் அன்பையும் ஆதரவையும் பெருமளவில் வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களை மகிழ்விக்கும் விதமாக முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டிருக்கிறோம். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆகஸ்ட் நடுப்பகுதியில் படப்பிடிப்பு முடிவடையும். ரிலீஸ் தேதியை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” என்றார்.

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். என் பி ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். மிலன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சுப்ரீம் சுந்தர் (ஸ்டண்ட்ஸ்), அனு வர்தன் (ஆடைகள்), சுப்ரமணியன் நாராயணன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), ஜே. கிரிநாதன் & கே ஜெயசீலன் (தயாரிப்பு நிர்வாகி), ஜி ஆனந்த் குமார் (ஸ்டில்ஸ்), கோபி பிரசன்னா (பப்ளிசிட்டி டிசைனர்), ஹரிஹரசுதன் (விஎஃப்எக்ஸ்) ஜிகேஎம் தமிழ் குமரன் (லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

சன் டிவி சாட்டிலைட் உரிமையைப் பெற்றுள்ளது மற்றும் நெட்ஃபிலிக்ஸ் ‘விடாமுயற்சி’ படத்தின் திரையரங்குக்கு பிந்தைய ஓடிடி உரிமையைப் பெற்றுள்ளது.

சென்னையில் மெத்தனால் ரசாயன கலவை சிக்கியது! 4 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் விற்பனையைத் தடுப்பதற்காக மதுவிலக்கு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை மாதவரம் அடுத்த வடபெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் கிடங்கு ஒன்றில் கள்ளத்தனமாக சாராயம் தயாரிக்க பயன்படுத்தும் மெத்தனால் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, போலீஸார் அங்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த கிடங்கின் ஓர் அறைக்கு பூட்டு போடப்பட்டு இருந்தது. போலீஸார் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சுமார் 1,500 லிட்டர் மெத்தனால் ரசாயன கலவை கலன்களில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், தடை செய்யப்பட்ட மெத்தனால் ரசாயன கலவையை பதுக்கி வைத்திருந்ததாக கவுதம், பரமசிவம், ராம்குமார், பென்சிலால் ஆகிய 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் விநியோகம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாதேஷ் என்பவருடன் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா? எனவும் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம்: புதுச்சேரி – தமிழக எல்லைப் பகுதிகள் தீவிர கண்காணிப்பு!

புதுச்சேரி ஜிப்மரில் தற்போது 12 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் நால்வர் நிலை கவலைக்கிடமாகியுள்ளது. அவர்களின் உறுப்புகள் அதிகளவில் செயல் இழக்க தொடங்கியுள்ளன. தொடர்ந்து கிசிச்சை தரப்படுகிறது.

கள்ளக்குறிச்சியில் கள்ள்ச் சாராயம் குடித்தவர்களில் தற்போது ஜிப்மர் சிகிச்சையில் திருமாவளவன் (46), ஏசுதாஸ், (35), மகேஷ் (41), பெரியசாமி (40), மாயக்கண்ணன் (72), கண்ணன் (55), வந்தனா- திருநங்கை(27), பாலு (29), மோகன் (50), சிவராமன் (45), ராமநாதன் (62), செல்வம் (45) ஆகிய 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 10 பேர் புதுச்சேரி ஜிப்மரில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒருவர் மூளைச்சாவு அடைந்ததாக தகவல் பரவியது.

புதுச்சேரி – தமிழக எல்லைப் பகுதிகள் தீவிர கண்காணிப்பு: 

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் தயாரிக்க மெத்தனால் புதுச்சேரி வழியாக சென்றதாக தகவலொன்று வெளியானதால் புதுச்சேரி – தமிழக எல்லைப் பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் உள்ளன. புதுச்சேரியில் காலாப்பட்டு, கோரிமேடு உள்ளிட்ட சோதனை சாவடிகளில் தீவிர சோதனையும் நடக்கிறது.

ஆனால் புதுச்சேரிக்கு தமிழகப் பகுதிகளுக்கு வர ஏராளமான கிராமப் பகுதிகளும் உள்ளன. அங்கு எவ்வித சோதனைச் சாவடிகளும் இல்லாத நிலையுள்ளதாகவும் பலர் குறிப்பிடுகின்றனர். புதுச்சேரியில் உள்ள சாராயக்கடைகளுக்கு மொத்தமாக சாராய விற்பனை செய்யவும், சாராயத்தை மொத்தமாக வெளியே எடுத்த செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை: 

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து 56 சிறப்பு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு கிசிச்சையளிக்கின்றனர் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. கள்ளச் சாராய புழக்கம் இருந்த 20 இடங்களில் மருத்துவ குழுவினர் தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். சிகிச்சை முடிந்தவர்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கி வீட்டுக்கு அனுப்பவும் மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.

 

சாதி வாரி கணக்கெடுப்பு முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்கம்!

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி 10.5% இடஒதுக்கீடு நீண்ட நாள் கிடப்பில் உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, 10.5% தரவுகள் இல்லாததால் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு அரசு எந்த விதத்திலும் தடையாக இல்லை.

சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தினால் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தார். அப்போது ஜி.கே.மணியின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதிலில், சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக் கோரி பேரவையில் விரைவில் தீர்மானம் கொண்டு வரப்படும். அதுவும் இந்த கூட்டத் தொடரிலேயே தீர்மானம் கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தார்.