வங்க கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள சூழலில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதி கனமழை பெய்யும் என்பதால், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் 21 செ.மீ.,க்கு மேல் மழை கொட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழகம் முழுதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:
தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இன்று அது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். மேலும் வலுவடைந்து, வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, தெற்கு ஆந்திர மாவட்டங்களை நோக்கி நகரக்கூடும்.
இடி மின்னல்:
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சியும், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும் காணப்படுகிறது. இதற்கு இணையாக, அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, ஏமன் நோக்கி நகர்கிறது. வளி மண்டல சுழற்சி மற்றும் இரு காற்று இணைவு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில், 20 செ.மீ.,க்கு மேல் அதி கனமழைக்கான ‘ரெட் அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், அரியலுார், பெரம்பலுார், தஞ்சாவூர், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில், 12 முதல் 20 செ.மீ., வரை மிக கனமழை பெய்வதற்கான ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், சில இடங்களில் நாளை அதி கனமழை பெய்யலாம் என ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தாலும், அது மெதுவாக நகர்வதால், எதிர்பார்த்ததை விட மிக கனமழை, அதி கனமழை சற்று தாமதமாக வாய்ப்புள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு பாலசந்திரன் கூறினார்.