Wednesday, May 1, 2024
Blog

ரத்னம் திரைவிமர்சனம்: இயக்குனர் ஹரி இப்படி செய்யலாமா ?! RATING 2.5/5

ஸ்டோன் பெஞ்ச் புரொடெக்‌ஷன் தயாரிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சமுத்திரக்கனி, ப்ரியா பவானி சங்கர், யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு உச்சநட்சத்திரங்கள் நடிப்பில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படமாக வெளியாகியுள்ளது ரத்னம். 

சிறுவயதில் தாயை இழந்த பின்னர், தன்னை அரவணைத்த சமுத்திரக்கனியை காப்பாற்றுவதற்காக கொலை செய்துவிட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்குச் செல்கின்றார் விஷால். இந்த இடைவெளியில் எம்.எல்.ஏ.,வாக சமுத்திரக்கனி ஆகிவிடுகின்றார். அதைத்தொடர்ந்தும்  சமுத்திரக்கனி அரவணைப்பால் வளரும் விஷால், சமுத்திரக்கனியின் அடியாளாக இருக்கின்றார்.

நற்குணம் கொண்ட அரசியல்வாதியிடம் அடியாளாக இருக்கும் விஷால், “கொள்கைக்காக தான் கொலையே செய்வேன்” என்ற மனநிலையில் தான் இருக்கின்றார். இந்நிலையில் வேலூருக்கு தேர்வு எழுத வரும் பிரியா பவானி சங்கரை பார்த்தவுடன் அவர் பின்னாலே செல்கிறார். தேர்வு எழுதும் நேரத்தில் பிரியா பவானி சங்கரை ஒரு கும்பல் தாக்க வருகிறது. அந்த கும்பலிடம் இருந்து அவரை விஷால் காப்பாற்றுகிறார். தொடர்ந்து பிரியா பவானி சங்கருக்கு அந்த கும்பல் மூலம் பிரச்சனை வருகிறது. இறுதியில் அந்த மர்ம கும்பல் யார்? பிரியா பவானி சங்கரை கொலை செய்ய துரத்த காரணம் என்ன? பிரியா பவானி சங்கரை விஷால் பாதுகாக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

கவுதம் வாசுதேவ் மேனன் என்ட்ரி எல்லாம் சரி தான் ஆனால் ஒரு உயர் அதிகாரி இப்படி அசிங்கமான வார்த்தையால் திட்டுவாரா? என்று சிந்திக்க வைத்துவிட்டது.  இசை காது வலிக்குதுப்பா….. ஒளிப்பதிவு ஓகே. முரளிசர்மாவின் வில்லன் நடிப்பு எப்படி என்றால் பவுடர் அடிப்பது, நெத்தியால் முட்டுவது, டவுசரோடு சுத்துவது…. அம்மா கதை ஒரு பக்கம், அப்பா கதை ஒரு பக்கம், பிரியா பவானி சங்கர் கதை ஒரு பக்கம் என கதையே புரியாமல் ரசிகர்கள் குலம்பிவிட்டனர். படம் முழுக்க வரும் வெட்டு, குத்து, ரத்தம் என ஒரு கட்டத்தில் சலிப்பையும் ஏற்படுத்துகின்றது. காமெடி சுத்தமாக எடுபடவில்லை என்றே சொல்லலாம். 

ஹரி படம் என்றாலே விறுவிறுப்பு, காதல், செண்டிமெண்ட் எல்லாம் இருக்கும் என்று ரசிகர்கள் நம்பி வருகின்றனர். ஆனால் இந்த படம் அதை பூர்த்தி செய்யவில்லை என்றே கூறலாம். இனி மேல் ஹரி அவர்கள் கதையை சரியான முறையில் தேர்வு செய்து இயக்கினால் நல்லது…. இல்லைஎன்றால்………….?

இந்த “ரத்னம்”- செம அடி    

வேலூரில் ஊராட்சி செயலாளர் உட்பட 2 பேர் மீது வழக்கு!

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் திருவலம் அடுத்துள்ள மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர், பாலேகுப்பம் கிராம ஊராட்சி செயலாளராக உள்ளார். இவரது மனைவி கலையரசி. இந்நிலையில், பிரபு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின்பேரில் வேலூர் லஞ்சஒழிப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், 2011 ஏப். 1-ம் தேதி முதல் 2017 மே 31-ம்தேதி வரையிலான காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.20.44 லட்சம் மதிப்பிலான சொத்துகளை சேர்த்தது தெரியவந்தது.

இதையடுத்து, பிரபு, கலையரசி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் விஜய் வழக்கு பதிவு செய்தார். மேலும், திருவலம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், பிரபுவின் வீட்டில் இருந்து வங்கிக் கணக்குபுத்தகங்கள், பல்வேறு சொத்துகள் தொடர்பான ஆவணங்களைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

ரூ 5 லட்சம் லஞ்சம்: காவல் ஆய்வாளர் கைது!

வழக்கில் விசாரணை நடத்தாமல் இருப்பதற்காக ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியதாக ஹரியாணாவின் காவல் ஆய்வாளா் மற்றும் இருவரை மத்திய புலனாய்வுப் பிரிவினா் (சிபிஐ) கைது செய்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். ஒரு வழக்கில் தன்னிடம் விசாரணை நடத்தப்படாமல் இருப்பதற்காக ஹரியாணா மாநிலம் யமுனா நகரில் உள்ள காவல் ஆய்வாளா் பல்வந்த் சிங் ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக ஒருவா் அளித்த புகாா் அளித்தாா்.

இதனடிப்படையில் பல்வந்த் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புகாா்தாரா் தனக்கும் பல்வந்த் சிங்குக்கும் இடையே நடந்த பேச்சுவாா்த்தைக்குப் பிறகு லஞ்சத் தொகை ரூ.5 லட்சமாகக் குறைக்கப்பட்டதாகக் கூறினாா்.

இந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளா் பல்வந்த் சிங் மற்றும் இரண்டு இடைத்தரகா்களான ஹா்பால் சிங் மற்றும் ஜனேந்தா் சிங் ஆகியோரை சிபிஐ சண்டீகரில் கைது செய்தது. பல்வந்த் சிங்கின் உத்தரவின் பேரில் இடைத்தரகா்கள் லஞ்சம் பெற்றது விசாரணையில் தெரிய வந்தது என்று அதிகாரி தெரிவித்தாா். கைது செய்யப்பட்ட அனைவரும் சண்டீகரில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படுவாா்கள்‘ என்று சிபிஐ செய்தித் தொடா்பாளா் ஒரு அறிக்கையில் தெரிவித்தாா்.

பின்னா், அனைத்து குற்றம் சாட்டப்பட்டவா்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. பல குற்றவியல் ஆவணங்களை மீட்டெடுக்கப்பட்டதாக செய்தித் தொடா்பாளா் கூறினாா்.

மணல் குவாரி முறைகேடு: கலெக்டர்களிடம் தீவிர விசாரணை!

மணல் குவாரி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் சென்னையில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் 10 மணி நேரத்துக்கு மேலாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் அளித்த பதில்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்ததைவிட அதிக அளவில் மணல் அள்ளப்பட்டு, சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாகவும், மணல் குவாரிகளில் கிடைத்த வருமானம் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 8 மணல் குவாரிகள் உட்பட 34 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023 செப்டம்பர் 12-ம் தேதி சோதனை நடத்தினர்.

குறிப்பாக, இதில் தரகர்களாக செயல்பட்டு வந்த தொழிலதிபர்கள், நீர்வளத் துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத பணம், அசையும் சொத்துகள், அசையா சொத்துகளை முடக்கி, பல்வேறு முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

சுமார் ரூ.4,000 கோடிக்கு சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சில அதிகாரிகள் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதன்படி, தமிழக நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் முத்தையா பல்வேறு ஆவணங்களுடன் ஏற்கெனவே ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், அமலாக்கத் துறை சம்மனை எதிர்த்து 5 மாவட்ட ஆட்சியர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறையின் சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்தது. மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததோடு, அமலாக்கத் துறை விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்களும் ஏப்ரல் 25-ம் தேதி(நேற்று) ஆஜராக உத்தரவிட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, எம்.பிரதீப்குமார் (திருச்சி), தீபக் ஜேக்கப் (தஞ்சாவூர்), எம்.தங்கவேலு (கரூர்), ஜெ.ஆனிமேரி ஸ்வர்ணா (அரியலூர்), வி.ஆர்.சுப்புலட்சுமி (வேலூர்)ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் மணல் குவாரி தொடர்பான ஆவணங்களுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு ஆஜராகினர்.

இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரி அருகில் உள்ள கிளை அலுவலகத்தில் இருந்ததால், 5 பேரும் அங்கு சென்றனர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்ட விவகாரத்தில் ஆட்சியர் என்ற முறையில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள், டெண்டர் அடிப்படையில்தான் மணல் அள்ளப்பட்டதா, அவை முறையாக கண்காணிக்கப்பட்டதா என்பது உட்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு ஆட்சியர்கள் அளித்த பதில், வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. 10 மணி நேரத்துக்கு மேல் நடந்த விசாரணை இரவு வரை நீடித்தது.

குவாரிகளில் சோதனையின்போது கைப்பற்றிய ஆவணங்கள், ஆட்சியர்கள் கொண்டு வந்த ஆவணங்கள் ஆகியவை சரிபார்க்கப்பட்டு, அதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

ஓட்டுநரை தாக்கிய கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் கைது… தொடர் விசாரணை!

கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பேருந்து 25க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தின் ஓட்டுநராக திருவாய்ப்பாடியைச் சேர்ந்த ரமேஷ் (45) என்பவரும், நடத்துனராக செந்தில்குமார் என்பவரும் பணியில் இருந்துள்ளனர். பேருந்து கும்பகோணம் பழைய பாலக்கரை அருகே வந்த போது போக்குவரத்து நெரிசலால் நின்றது. அப்போது, 10 பேர் கொண்ட கும்பல், அந்தப் பேருந்தை நகர்த்துமாறு ஓட்டுநரிடம் தெரிவித்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பேருந்து எடுக்க வாய்ப்பு இல்லை என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநரை அருகில் உள்ளவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள், அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற போது அவர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. அவர்களும் வெளி நோயாளியாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த கும்பகோணம் கிழக்கு போலீஸார், கும்பகோணம் காமராஜ் நகரைச் சேர்ந்த சரவணன் மகன் சுதர்சன் (24), சரவணன் மகன் உதயகுமார் (25), பாலாஜி நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் குமரன் மகன் ஜனார்த்தனன் (20), பாலக்கரையை சேர்ந்த சக்திவேல் மகன் கார்த்திகேயன் (21) ஆகிய 4 பேரை கைது போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வரிசையில் நின்று மயங்கிய வாக்காளர்கள்!

வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 19 (வெள்ளிக்கிழமை) அன்று நிலவிய உச்ச வெப்பநிலையின் காரணமாக தமிழகம் முழுவதும் வாக்குச் சாவடிகளுக்கு அருகே மயக்கமடைந்த 428 பேருக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக மருத்துவ சேவை அளிக்கப்பட்டுள்ளது.

அதில், பெரும்பாலானோா் முதியவா்கள் என்றும், நீா்ச்சத்து இழப்பு காரணமாக அவா்களுக்கு அத்தகைய பாதிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 3,726 வாக்குச் சாவடிகள் உள்பட மாநிலம் முழுவதும் 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஒருபுறம் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. மற்றொருபுறம் வாக்காளா்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை சுகாதாரத் துறை மேற்கொண்டது.

அதன்படி, வாக்குச் சாவடிகளுக்கு அருகே 1,353 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதில், குளுக்கோஸ் பாட்டில்கள், உப்பு-சா்க்கரை கரைசல், ஆக்சிஜன் சிலிண்டா்கள் ஆகியவை வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக இருப்பு வைக்கப்பட்டிருந்ததுடன், கூடுதல் எண்ணிக்கையிலான மருத்துவ உதவியாளா்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

அதே போன்று 108 சேவைக்கான கட்டுப்பாட்டு மையத்திலும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இது தொடா்பாக 108 ஆம்புலன்ஸ் சேவை மாநில செயல் தலைவா் செல்வகுமாா் கூறியதாவது:

தோ்தல் நாளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வாக்குச் சாவடிகளுக்கு அருகில் இருந்து 400-க்கும் மேற்பட்ட அழைப்புகள் 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்துக்கு வந்தன. வாக்களிக்கச் சென்ற முதியவா்கள், இணை நோயாளிகள் 428 போ் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்தனா். அதில், சிலருக்கு நினைவிழப்பு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து, சம்பவ இடங்களுக்கு எங்களது மருத்துவ உதவியாளா்கள் ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் விரைந்து உரிய முதலுதவி அளித்தனா். அதைத் தொடா்ந்து அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு அவா்கள் அழைத்துச் செல்லப்பட்டனா்.

அதிகபட்சமாக சென்னையில் 50 பேருக்கு அத்தகைய மருத்துவ சேவை வழங்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 33 பேருக்கும், திருவள்ளூா், செங்கல்பட்டில் தலா 27 பேருக்கும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. ஈரோடு, சேலத்தில் முறையே 21, 20 பேருக்கு அவசர மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டன.

சம்பந்தப்பட்ட மாவட்டங்கள் அனைத்திலும் கடந்த வெள்ளிக்கிழமை அதீத வெயில் பதிவானது. அதன் காரணமாகவே பலா் மயக்கமடைந்தனா். அவா்களில் பெரும்பாலானோருக்கு இணை நோய்கள் இருந்தன. அது மட்டுமன்றி, நீா்ச்சத்து இழப்பு ஏற்பட்டிருந்ததால் அவா்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. உப்பு – சா்க்கரை கரைசல் வழங்கப்பட்டாதால் அவா்களில் பலா் உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்பினா் என்றாா்.

தமிழ்நாட்டில் எவ்வளவு வாக்குபதிவு தெரியுமா?!

தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவானதாக அதிகாரபூர்வ இறுதி அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிக்கும் கடந்த 19ஆம் தேதி ஒரேகட்டமாக பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலையில் மந்தமாகத் தொடங்கிய வாக்குப் பதிவு, மாலையில் விறுவிறுப்பை எட்டியது. வாக்குப் பதிவின்போது, பெரிய அளவில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகள் ஏதும் ஏற்படவில்லை என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 81.20 % வாக்குப்பதிவும், அதேசமயம் குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் கடந்த மக்களவைத் தேர்தல்களை விட வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது.

மேலும் தேர்தலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் வாக்களித்துள்ளனர். கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் தமிழ்நாட்டில் 72.29% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் இந்த தேர்தலில் அதைவிட குறைந்த அளவே வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தோ்தல் வாரியாக வாக்குப் பதிவு சதவீதத்தில்:

1. கள்ளக்குறிச்சி – 79.21

2. தருமபுரி – 81.20

3. சிதம்பரம் – 76.37

4. பெரம்பலூா் – 77.43

5. நாமக்கல் – 78.21

6. கரூா் – 78.70

7. அரக்கோணம் – 74.19

8. ஆரணி – 75.76

9. சேலம் – 78.16

10. விழுப்புரம் – 76.52

11. திருவண்ணாமலை – 74.24

12. வேலூா் – 73.53

13. காஞ்சிபுரம் – 71.68

14. கிருஷ்ணகிரி – 71.50

15. கடலூா் – 72.57

16. விருதுநகா் – 70.22

17. பொள்ளாச்சி – 70.41

18. நாகப்பட்டினம் – 71.94

19. திருப்பூா் – 70.62

20. திருவள்ளூா் – 68.59

21. தேனி – 69.84

22. மயிலாடுதுறை – 70.09

23. ஈரோடு – 70.59

24. திண்டுக்கல் – 71.14

25. திருச்சி – 67.51

26. கோவை – 64.89

27. நீலகிரி – 70.95

28. தென்காசி – 67.65

29. சிவகங்கை – 64.26

30. ராமநாதபுரம் – 68.19

31. தூத்துக்குடி – 66.88

32. திருநெல்வேலி – 64.10

33. கன்னியாகுமரி – 65.44

34. தஞ்சாவூா் – 68.27

35. ஸ்ரீபெரும்புதூா் – 60.25

36. வட சென்னை – 60.11

37. மதுரை – 62.04

38. தென் சென்னை – 54.17

39. மத்திய சென்னை – 53.96

மொத்தம் – 69.72

2019 மக்களவைத் தோ்தல் – 72.29

டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை!

சென்னை:

இன்ஃபோசிஸ் இணை நிறுவனரும், பிரதிக்ஷா அறக்கட்டளை பொறுப்பாளருமான  பத்மபூஷன் ஸ்ரீ – கிரிஸ் கோபாலகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது 2024ஐ இன்று டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவை வழங்கி கவுரவித்தது. இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதானது, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் குறிப்பாக மூளை ஆராய்ச்சியை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டது.

கிரிஸ் கோபாலகிருஷ்ணனுக்கு இந்த விருதை,  டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி. மோகன், துணைத் தலைவர் டாக்டர் ரஞ்ஜித் உன்னிகிருஷ்ணன், நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆர்.எம். அஞ்சனா ஆகியோர்  முன்னிலையில் சங்கர நேத்ராலயா தலைவர் டாக்டர் டி.எஸ். சுரேந்திரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை  சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் நீரிழிவு அருங்காட்சியகமான ‘மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை நீரிழிவு அருங்காட்சியகம்’ திறப்பு விழா நடைபெற்றது. இந்த அருங்காட்சியகம் சிறுசேரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை கிரிஸ் கோபாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

நீரிழிவு ஆராய்ச்சிக்கான உலக புகழ்பெற்ற மையமாக, மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையில் உள்ள நீரிழிவு அருங்காட்சியகம், நீரிழிவு ஆராய்ச்சியின் பல ஆண்டு கால வரலாற்றைக் கவுரவிக்கும் மற்றும் விவரிக்கும் பிரத்யேக அருங்காட்சியகமாக இருக்கும். அதன் ஆரம்பகால சிகிச்சை, கடந்து வந்த பாதை, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் உலகெங்கிலும் உள்ள மூத்த விஞ்ஞானிகளின் பிற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆகியவையும் இங்கு இடம் பெற்றுள்ளன.

இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் MDRF இன் தலைவர் டாக்டர் வி. மோகன் கூறுகையில்:

மூளை ஆராய்ச்சியில் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் மேற்கொண்ட பணியானது தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மூளை ஆராய்ச்சி மையம் போன்ற அவரது சமூக மேம்பாட்டு திட்டங்கள், நரம்பியல் பிரச்சினைகள் உட்பட பல்வேறு சுகாதார சவால்களை எதிர்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவரது பங்களிப்பை அங்கீகரிப்பதை ஒரு பெரிய கவுரவமாக நாங்கள் கருதுகிறோம். மேலும் வரும் காலங்களில் மருத்துவத் துறைகளில் இதுபோன்ற பல்வேறு சமூகநல முயற்சிகளை பலரும் மேற்கொள்வார்கள் என்று நாம் உறுதியாக நம்புவோம் என்று பேசினார்.

விருதை பெற்ற பத்மபூஷன் – ஸ்ரீ கிரிஸ் கோபாலகிருஷ்ணன் பேசுகையில்:

மருத்துவ அறிவியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி நீரிழிவு ஆராய்ச்சியில் முன்னோடியாக திகழும் டாக்டர் மோகனிடமிருந்து இந்த விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நீரிழிவு அருங்காட்சியகத்தின் திறப்பு விழா மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நீரிழிவு ஆராய்ச்சியின் வரலாறு மற்றும் முன்னேற்றங்களை விவரிக்கிறது. இறுதியில் இந்தியாவை உயர்தர ஆராய்ச்சியில் உலகளாவிய தலைவராக மாற்றுவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. ஸ்டார்ட்அப் நிறுவனங்களைப் பொறுத்தவரை இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது, அதேபோல ஆராய்ச்சி துறையிலும் இதுபோன்ற முன்னேற்றங்கள் ஏற்படும் என்று நான் நம்புகிறேன். மூளை ஆராய்ச்சி மையமானது மூளை செயல்பாட்டின் பிரச்சினைகளை கண்டறிந்து, புதுமையான சிகிச்சை முறைகளுக்கு வழி வகுக்கிறது. உயர்தர ஆராய்ச்சியில் முதல் 5 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது என்று பேசினார்.

டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆர்.எம். அஞ்சனா பேசுகையில்:

மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையில் திறக்கப்பட்டுள்ள நீரிழிவு அருங்காட்சியகம், இந்தியாவில் நீரிழிவு ஆராய்ச்சியின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். இங்கு பல ஆண்டு கால நீரிழிவு ஆராய்ச்சியின் வரலாறு மற்றும் அறிவியல் முன்னேற்றங்கள் ஆகியவை இடம் பெற்று இருப்பதோடு உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற விஞ்ஞானிகளின் தொழில்நுட்ப முன்னேற்றங்களும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன என்று தெரிவித்தார்.

டாக்டர் மோகன்ஸ் டயாபடிஸ் ஸ்பெஷாலிட்டி சென்டர் பற்றி:

1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சென்னையை தலைமையிடமாக கொண்டு நிறுவப்பட்டது டாக்டர். மோகன்ஸ்  நீரிழிவு சிறப்பு மையம்.  இன்று நீரிழிவு  நோயாளிகளுக்கு விரிவான சேவைகளை வழங்கும் இந்தியாவின் முன்னணி  நீரிழிவு மையமாக விளங்குகிறது. டாக்டர். மோகன்ஸ்  நீரிழிவு சிறப்பு மையம் இந்தியாவில் 50 க்கும் மேற்பட்ட நீரிழிவு மையம் மற்றும்  மருத்துவமனைகள் கொண்டுள்ளது.  நீரிழிவு நோயாளிகள் 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மேலும். 5.5 லட்சத்துக்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் ஆலோசனைக்காக டாக்டர் மோகன்ஸ் டயாபடிஸ் சென்டர் அணுகியுள்ளனர். சென்னையில் கோபாலபுரத்தில் இதன் முதன்மை மருத்துவமனை அமைந்துள்ளது.  இங்கு நீரிழிவு பராமரிப்பு,  நீரிழிவு கண் பராமரிப்பு, நீரிழிவு கால் பராமரிப்பு, நீரிழிவு இதய பராமரிப்பு, நீரிழிவு பல் பராமரிப்பு,  நீரிழிவு பக்கவிளைவுகள் தடுப்பு, உணவு ஆலோசனை, நீரிழிவு பராமரிப்பு போன்றவற்றில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கு 89391 10000 என்ற எண்ணை தொடர்பு கொண்டு  முன்பதிவு செய்யலாம். அல்லது  www.drmohans.com மேலும் விவரங்களுக்கு   இணையதளத்தில்  பார்க்கலாம்.

படுக்கை அறையில் டி.எஸ்.பி : சிக்கியது எப்படி?!

திருச்சி ஆயுதப்படையில் வேலை பார்க்கும் பெண் போலீஸ் ஏட்டுடன், நாகப்பட்டினம் டவுன் டி.எஸ்.பியாக இருக்கும் பாலகிருஷ்ணன் தனிமையில் இருந்துள்ளார். அப்போது பெண் போலீஸின் உறவினர்கள் இருவரையும் கையும் களவுமாக வீட்டிற்குள் வைத்து பூட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக விசாரித்த போது:

நாமக்கலைச் சேர்ந்த டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் திருச்சியில் பணியாற்றும் போது ஆயுத படையில் பணியாற்றி வரும் பெண் போலீஸுக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பெண் போலீசை டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் நாகைக்கு அழைத்துச் சென்று இருவரும் ஒன்றாக தங்கியிருந்து விட்டு பின்னர் திருச்சிக்கு திரும்பியுள்ளனர்.

வழியில் அவர்களை பின்தொடர்ந்த பெண் போலீஸின் உறவினர்கள், பாபநாசம் அருகே இருவரையும் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது இருவரும் சேர்ந்து ஒரு குற்றவாளியை பிடிக்க வந்திருப்பதாக பதிலளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து திருச்சியில் பெண் போலீஸின் வீட்டில் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதனையறிந்த உறவினர்கள் நள்ளிரவு 1.30 மணிக்கு கையும் களவுமாக பிடிப்பதற்காக இருவரையும் வீட்டிற்குள் வைத்து பூட்டிவிடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், டி.எஸ்.பி பாலகிருஷ்ணனை மீட்டு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை விசாரிக்கச் சென்ற அதிகாரிகளிடம்  இது என்னுடைய தனிப்பட்ட விவகாரம், இதில் நீங்கள் எதற்கு தலையிடுகிறீர்கள் என்று கடுமையாக நடந்து கொண்டுள்ளார். மேலும் நான் ஒரு உயர் அதிகாரி…. எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

இந்த வழக்கை கையில் எடுத்த காவல்துறை முதலில் பாபநாசம் பகுதி சாலையில் உள்ள உள்ளுர் போலீசாரின் உதவியுடன் சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து இந்த சம்பவம் குறித்து உண்மைத் தன்மையை அறிந்துள்ளனர். தற்போது பாலகிருஷ்ணன் நாகைக்கு மாற்றப்பட்டு டவுன் டி.எஸ்.பியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தற்போது நாகையிலும் இரு பெண் காவலர்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. உயர் அதிகாரிகள் அழைத்தால் பெண் காவலர்கள் முதலமைச்சரின் தனிபிரிவுக்கு புகார் அளிக்க வேண்டியது தானே இவர்கள் போவதால் தான் காவல்துறைக்கே அவப்பெயர் ஏற்படுகிறது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

டிக்கெட் கேட்ட TTE: ஓடும் ரெயிலில் தள்ளிவிட்ட பயணி!

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பாட்னாவுக்கு பாட்னா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 2 ஆம் தேதி  மாலை புறப்பட்டுச் சென்றது. எர்ணாகுளத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் அந்த ரயிலில் டிக்கட் பரிசோதிக்கும் டி.டி.இ-யாக பணியில் இருந்துள்ளார். எர்ணாகுளம் முதல் ஈரோடு வரை டிக்கெட் பரிசோதிக்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர் ஒவ்வொரு கோச்சுக்களிலும் டிக்கெட் பரிசோதித்துக் கொண்டிருந்தார். S11 கோச்சில்ல அவர் டிக்கெட் பரிசோதனை செய்ய சென்றபோது அங்கு வட மாநில தொழிலாளர்கள் அதிகமாக பயணித்திருக்கிறார்கள். அதில் சிலர் டிக்கட் இல்லாமல் பயணித்ததாக கூறப்படுகிறது.

ரயிலின் வாசலுக்கு அருகே நின்றிருந்த அவர்களிடம் டி.டி.இ டிக்கெட் கேட்டதுபோது தகராறு செய்துள்ளார்கள். வாக்குவாதம் முற்றிய நிலையில் வடமாநில தொழிலாளி ஒருவர் டி.டி.இ வினோத்தை ஓடும் ரயில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் வினோத் ரயில் சக்கரத்தில் சிக்கி இறந்துள்ளார்.

அந்த கோச்சில் இருந்த மற்ற பயணிகள் ரயில்வே போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரயில்வே போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒடிசா-வைச் சேர்ந்த ரஜனிகாந்த் என்பவரை பாலக்காட்டில் வைத்து ரயில்வே போலீஸார் கைது செய்தனர். ரஜனிகாந்த் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. திருச்சூர் ரயில் நிலையத்திற்கும் பாலக்காடு ரயில் நிலையத்துக்கும் இடையே இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

முளங்குந்நத்துகாவு ரயில் நிலையத்தை ரயில் கடந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வினோத்தின் உடல் மீட்கப்பட்டு திருச்சூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் டிக்கட் எடுக்காமல் முன்பதிவு பெட்டிகளில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும், அவர்களால் பணம் செலுத்தி முன்பதிவு பெட்டியில் பயணிக்கும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் சம்பவங்களும் அரங்கேறுவது வழக்கம் என்கிறார்கள் ரயில்வே பணியாளர்கள். இந்த நிலையில் டிக்கட் கேட்ட டி.டி.இ-யை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் தென்னகமான கேரளாவில் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

CLOSE
CLOSE