Saturday, January 18, 2025
Blog

நடிகர் நடிகைகள் பற்றி தவறாக எழுதாதீர்கள்- நடிகர் விஷால்

சென்னை வடபழனியில் உள்ள தனியார் விடுதியில் மதகஜராஜா படத்தின் வெற்றிவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் இயக்குனர் சுந்தர் சி, நடிகர் விஷால், அஞ்சலி, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய நடிகர் விஷால்:

“(மைக்கை நடுங்கியபடி ஆக்‌ஷன் செய்து) டிடி… திரும்பவும் யூடியூபில் வைரல் ஆகிடுவோமா?” என்று கலகலப்பாக பேசத்தொடங்கினார். தொடர்ந்து அவரே, “அப்படி விட மாட்டேன். நிலநடுக்கம் வந்தால்கூட, சின்ன செய்திதான் வெளியேவரும். ஆனால் என்னுடைய இந்த நடுக்கம் உலக அளவில் பரவிவிட்டது. ஏகப்பட்ட பேர் எனக்கு என்ன ஆனது என்று கேட்டனர்.

கோயில் வாசலில் இருந்த பூக்கார அம்மாகூட ‘தம்பி உனக்கு என்ன ஆனது?’ என்று கேட்டார். தூய்மை பணியாளராக இருந்த ஒரு அம்மாவும், என் உடல்நலனை விசாரித்தார். இந்த அன்பையெல்லாம் மறக்க மாட்டேன். என்னை பிடிக்காதவர்களுக்கு கூட என்னை பிடித்துப்போய்விட்டது. நன்றி.

உண்மையில் என்னுடைய மருத்துவர் ‘அந்த நிகழ்வுக்கு நீங்கள் போக வேண்டாம்; உங்கள் உடல்நிலை சரி இல்லை’ என்று அறிவுறுத்தினார். ஆனால் என் கண் முன் நின்றது சுந்தர் சி. அவருக்காக தான் நான் வந்தேன். ஆனால் என்னைப் பற்றி என்னென்னவோ எழுதிவிட்டார்கள்.

நடிகர், நடிகைகள் பற்றி தவறாக எழுதாதீர்கள்… ஒருவேளை doubt இருந்தால் எனக்கோ என் மேலாளருக்கோ அழைத்து கேளுங்கள்; அதன் பிறகு எழுதுங்கள். தவறாக எழுதாதீர்கள்” என்றார்.

தொடர்ந்து படத்தின் வெற்றி குறித்து பேசிய அவர், “தற்போது நடிகர்கள் இயக்குநர்கள் ஆகி விட்டார்கள், இயக்குநர்கள் நடிகர்கள் ஆகிவிட்டார்கள். எந்த தயாரிப்பாளர்களுக்கும் date கொடுக்க பயமாக இருக்கிறது gst கட்டுவதில்லை, ஒழுங்காக சம்பளம் கொடுப்பதில்லை. அதனால் ஜெமினி தயாரிப்பு நிறுவனம் மீண்டும் படங்களை எடுக்க வேண்டும். இது போல் நம்பிக்கையான தயாரிப்பாளர்கள் தேவை. என்னுடைய வாழ்க்கையில் பல அற்புதங்களை சந்தித்தாலும் அழுதது கிடையாது. கடைசியாக கண் கலங்கியதென்றால், அனுமன் படத்தில் வரலக்ஷ்மி நடித்த ஒரு சீனை பார்த்துதான். அதைப் பார்த்து கண்கலங்கி விட்டேன்.

அஜய் ஞானமுத்துவுடன் ஒரு படம், துப்பறிவாளன் 2 படமெல்லாம் அடுத்தடுத்து பண்ண திட்டமிட்டுள்ளோம். என்னுடைய அடுத்த படம் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் அமைகிறது. இதையெல்லாம் விட்டு சுந்தர் சி என்னை அழைத்தால் உடனடியாக ஓடி வந்துவிடுவேன். இந்த Vibe-ஓடு சேர்த்து, ஆம்பள படத்தை ரீ ரிலீஸ் செய்ய போகிறோம்” என்றார்.

தொடர்ந்து மத கஜ ராஜாவில், ஆர்யா நடித்தது பற்றி கேட்கப்பட்டதற்கு, “ஆர்யா மாதிரி ஒரு நண்பர் கிடைத்தது பாக்கியம். ஆர்யா எந்த படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க அழைத்தாலும் அதில் நடிக்க சென்று விடுவார். எனக்கு தெரிந்து மனோரமாவை தாண்டி ஆர்யாதான் அதிக படத்தில் நடித்து இருப்பார் என்று நினைக்கிறேன்” என்றார்.

RAJ KUMAR- CINEMA REPORTER

 

திருப்பூரில் 7 பேர் கைது! யார் இவர்கள்?!

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 7 பேர் இன்று கைது செய்யப்பட்டனர். திருப்பூர், கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களில் வங்கதேசத்தினர் ஏராளமானோர் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக வாழ்ந்து வருவதாக தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் புகார் தெரிவித்து வரும் நிலையில், திருப்பூரில் கடந்த 11-ம் தேதி இரவு திருப்பூர் மாநகர் மற்றும் பல்லடம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் முறைகேடாக தங்கியிருந்த 31 வங்கதேசத்தினரை கோவை தீவிரவாத தடுப்பு கண்காணிப்பு குழுவினர் கைது செய்தனர்.

சட்டவிரோதமாக திருப்பூரில் பலர் தங்கியிருக்கலாம் என போலீஸார் விசாரணையில் தெரியவந்த நிலையில், திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் போலீஸார் தொடர்ந்து ஆவணங்களை பரிசோத்து வருகின்றனர்.அதன் ஒருபகுதியாக திருப்பூரில் இன்று வடக்கு காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வடமாநிலத்தவர்கள் போல் இருந்த 13 பேரை பிடித்து விசாரித்தனர். போலீஸார் விசாரணையில் 7 பேர் வங்கதேசத்தினர் என்பது தெரியவந்தது.

இம்ரான்ஹூசைன் (35), நூரன் அபி (43), ரப்பினி மண்டல்(35), ஷாஜகான்(32), மொக்டெர்(45), ரஃபிகுல் இஸ்லம்(30) மற்றும் கபீர் ஹூசைன்(37) ஆகிய 7 பேர் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும், திருப்பூர் கொங்கு பிரதான சாலையில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளர்களாக தங்கி வேலை செய்து வந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த 7 பேர் மீது வெளிநாட்டு வாழ் தடை சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குபதிந்து திருப்பூர் வடக்கு போலீஸார் கைது செய்தனர்.

‘மத கஜ ராஜா’ விமர்சனம் RATING 3.8/5

இயக்குநர் சுந்தர் சி – விஷால் கூட்டணியில் ‘மத கஜ ராஜா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

விமர்சனம்: 

சிறுவயதிலிருந்தே விஷால், சந்தானம், சடகோபன் ரமேஷ், நிதின் சத்யா ஆகியோர் நண்பர்களாக இருக்கின்றனர். வெவ்வேறு ஊர்களில் வசிப்பவர்கள் ஒரு திருமணத்தில் மீண்டும் சந்திக்கும்போது தன் நண்பர்களின் வாழ்க்கையில் பிரச்னைகள் உள்ளதை விஷால் அறிகிறார். முக்கியமாக, சடகோபன் ரமேஷ் மற்றும் நிதின் சத்யா இருவரும் ஒரே ஆளால் பாதிக்கப்பட்டிருப்பதைத் தெரிந்து கொண்ட விஷால் அதை தீர்க்க நினைக்கிறார். அவர்கள் என்ன பிரச்னையில் இருக்கிறார்கள்? விஷால் தன் நண்பர்களுடன் இணைந்து சரி செய்தாரா? என்பது தான் கதை….

சுந்தர்.சி தனது வழக்கமான டெம்ப்ளேட்களை கொண்டே ஒரு பக்கா கமர்ஷியல் படத்தை கொடுத்து ஜெயித்திருக்கிறார் என்று தாராளமாக சொல்லலாம். முதலில் இந்த படம் 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகிருக்க வேண்டிய ஒன்று என்பதை மனதில் வைத்துக் கொண்டு பார்ப்பது அவசியம். அந்த காலகட்டத்தில் வெளியான படங்களில் இடம்பெற்றிருந்த சிறுபிள்ளைத்தனமான காமெடி, இரண்டு ஹீரோயின்கள், அவர்களுக்கு தனித்தனியே இரண்டு ’கவர்ச்சி’ பாடல்கள், அவர்களை வைத்து இரட்டை அர்த்த வசனங்கள் அனைத்தும் இதிலும் உள்ளன.

மயில்சாமி, மணிவண்ணன், மனோபாலா, சிட்டி பாபு, சீனு மோகன் என மறைந்த நடிகர்கள் பலரையும் பெரிய திரையில் மீண்டும் பார்ப்பது நெகிழ்வை தந்தது. குறிப்பாக மணிவண்ணன், மனோபாலா இருவரும் வரும் காட்சிகள் சிறப்பு. அதிலும் க்ளைமாக்ஸுக்கு முன்னால் மனோபாலாவின் பிணத்தை வைத்துக் கொண்டு விஷாலும், சந்தானமும் செய்யும் அலப்பறைகள் அதிரடி சரவெடி ரகம். அந்த நீண்ட காட்சி முழுவதுமே அரங்கில் ஓயாத சிரிப்பலை. படத்தின் வெற்றிக்கு இந்த காட்சியே முக்கிய பங்காக இருக்கும்.

விஜய் ஆண்டனியின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. பாடல்களில் ‘சிக்கு புக்கு ரயிலு வண்டி’ பாடல் ரசிக்க வைக்கிறது. விஷால் குரலில் ஏற்கெனவே ஹிட் ஆன ‘மை டியர் லவ்வரு’ பாடல் வரும் இடத்தில் அரங்கம் அதிர்கிறது. 

அனைவரும் குடும்பத்துடன் குழந்தைகளுடன் பார்ப்பதால் கவர்ச்சி காட்சிகளை குறைத்திருக்கலாம் என பார்வையாளர்கள் கருத்து…..

மொத்தத்தில் இந்த ‘மத கஜ ராஜா’ – சிரிப்பு மழை

RAJKUMAR- CINEMA REPORTER

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதியில் திருவிழா தொடக்கம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் சுவாமி தலைமைப்பதியில் 11 நாட்கள் நடைபெறும் தை திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டிற்கான தை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் முத்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல், அதிகாலை அய்யாவுக்கு பணிவிடை, கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் லைமை பதி தலைமை குரு பாலபிரஜாபதி அடிகளார் திருக்கொடியேற்றி விழாவை தொடங்கிவைத்தார். இதில் ஏராளமான அய்யாவழி பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மதியம் வடக்கு வாசலில் அன்னதர்மம், இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதலும் நடந்தது. 2ம் நாளான நாளை இரவு அய்யா மயில்வாகனத்தில் பவனி வருதல் அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம்வருதல், 4ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் வலம் வருதல், 5ம் நாள் பச்சை சாத்தி சப்பர வாகனத்தில் பவனி வருதல், 7ம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்தில் பவனி வருதல் நடக்கிறது.

வரும் 24-ம் தேதி 8ம் திருவிழாவில் அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றின் கரையில் கலிவேட்டையாடுதல், சுற்றுப்புற கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி, இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யா தவக்கோலத்தில் காட்சி தரும் நிகழ்வு, தொடர்ந்து அன்னதர்மம் நடக்கிறது.

9ம் நாள் இரவு அனுமன் வாகன பவனி, 10ம் திருவிழாவான 26-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணிக்கு இந்திர விமான வாகன பவனி, 11ம் திருவிழாவான 27-ம் தேதி மதியம் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து திருக்கொடி இறக்கமும்நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பணிவிடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி மற்றும் அய்யா வைகுண்டர் கலையரங்கத்தில் தினமும் அய்யாவழி சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

‘வணங்கான்’ விமர்சனம் RATING 3.5/5

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய்யின் வித்தியாசமான நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘வணங்கான்’. படத்தில்  அருண் விஜய்யுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

விமர்சனம்:

கன்னியாகுமரி, ஆழிப்பேரலையில் பெற்றோரை இழந்த அருண் விஜய், அவரைப் போலவே திக்கற்று நின்ற தேவியை சிறுவயது முதலே தனது தங்கையாக வளர்த்து வருகிறார். கிடைக்கிற வேலைகளைச் செய்து வாழ்ந்து வரும் கோட்டி தன் கண்ணெதிரே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கிறார். இதனால் அவரது தங்கை உட்பட அவருக்கு உதவியாக வரும் அனைவரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

இதனிடையே, சுற்றுலா வழிகாட்டியாக பிழைப்பு நடத்திவரும் டீனா , கோட்டியை விரட்டி விரட்டி காதலிக்கிறார். ஒரு நிரந்தரமான வேலை இருந்தால், கோட்டி சரி ஆகிவிடுவார் என்று நம்பும் அவரது நலம் விரும்பிகள், ஆதரவற்ற இல்லம் ஒன்றில் கோட்டியை காவலராக வேலைக்கு சேர்த்து விடுகின்றனர். அந்த இல்லத்தில், குழந்தைகள், பெண்கள் என பல பார்வைத்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள் இருக்கின்றனர்.

அந்த இல்லத்தில்,வெளியே சொல்ல முடியாத சம்பவம் ஒன்று நடக்கிறது. அச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கோட்டியிடம் முறையிட, சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரையும் நேரிலும் பார்த்து விடுகிறார் அருண் விஜய். அவர்களை என்ன செய்தார் என்பதே மனதை உருக்கும் கதை…

சோகத்தை அள்ளி வழங்கும் கதாபாத்திரத்தில் நூறு சதவீதம் ஆத்மார்த்தமாக நடிப்பை வழங்கி அசத்தி உள்ளார் அருண் விஜய். சண்டை காட்சிகள் அதிரடி தான். பாச உணர்வு, காதல், சண்டை, நேர்மை என கதை ரசிக்க வைக்கிறது. இசை மற்றும் பாடல்கள் இனிக்கிறது.

பாதரியார் நெற்றியில் குங்குமம் வைத்திருப்பது ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா?! வன்முறை காட்சிகளில் கூடுதல் கவனம் வேண்டும்.

மொத்தத்தில் இந்த ‘வணங்கான்’ – நேர்மை கலந்த பாச வெறியன்

ராஜ் குமார் (சினமா நிருபர்)       

 

காத்து வாக்குல ஒரு காதல் இசை வெளியீட்டு விழா

சென்னை:

சென்னை புரடக்சன்ஸ் சார்பாக எழில் இனியன் பி மற்றும் ராஜாத்தி எழில் இனியன் தயாரிக்க மாஸ் ரவி இயக்கி நாயகனாக நடிக்கும் திரைப்படம் காத்துவாக்குல ஒரு காதல்.

சூப்பர் சுப்பராயன், தீனா, லட்சுமி ப்ரியா, மஞ்சுளா ராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகிறார்கள். ஜி.கே.வி. – மிக்கின் அருள்தேவ் இசை அமைக்கிறார்.

படம் விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் டீசர் வெளியீட்டு விழா, மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா எம்.பி. தலைமையில், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் மத்திய முன்னாள் அமைச்சர் திரு ஆ . ராசா MP பேசியதாவது :

“இந்த விழாவிற்கு என்னையும் அழைத்து பெருமை சேர்த்திருக்கும் தயாரிப்பாளர் எழில் இனியன் அவர்களே, இயக்குனர் மாஸ் ரவி அவர்களே இத்திரைப்படத்தின் கலைஞர்கள் மஞ்சுளா அவர்களே, ஜி. கே.வி அவர்களே, சூப்பர் சுப்பராயன் அவர்களே, சுபாஷ் மணியன் அவர்களே, ராஜ்குமார் அவர்களே, இவர்களோடு இணைந்து பணியாற்றிய ஏனைய கலைஞர்களே…

பத்திரிகையாளர்களே, ஊடகவியல் நண்பர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம் .

நான் சார்ந்திருக்கின்ற திராவிட முன்னேற்ற கழகத்துக்கும் கலை இலக்கியம் – திரைத்துறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் நான் அரசியலுக்கு வந்த 90-களில் இருந்தே, அதிகமான நேரத்தை சினிமாவிற்கு என்னால் ஒதுக்க இயலாமல் போய்விட்டது. திரைப்பட நிகழ்வுகள் சிலவற்றில் தலைவர் கலைஞர் அவர்களுடன் பங்கேற்றது உண்டு. அவ்வளவுதான்.

நாங்கள் இளவயதில் பார்த்த திரை உலகமும், இன்றைக்கு இருக்கிற திரை உலகமும் நாங்கள் அப்போது அனுபவித்த இசையும், இன்றைக்கு இருக்கின்ற பிள்ளைகள் அனுபவிக்கும் இசையும் இருவேறு உலகத்தில் இருக்கின்றனவோ என்கிற அளவிற்கு திரை உலகம்முதிர்ச்சி அடைந்திருக்கிறதா அல்லது சிலர் கூறுவதைப்போல சீரழிந்திருக்கிறதா என்பதையெல்லாம் நான் மிகப்பெரிய ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளாதவன்.

ஆனால் காதலும், வீரமும் தமிழர்களின் வாழ்க்கையில் இரண்டற பின்னியிருந்தது திராவிட இலக்கியங்கள், சங்க பாடல்களில் இருந்து பல்வேறு விதமான குறிப்புகளை பேரறிஞர் அண்ணா அவர்களும் தலைவர் கலைஞர் அவர்களும் எழுத்தில் அளித்ததை படித்து வளர்ந்தவர்கள் நாங்கள்.

இன்றைக்கு இருக்கின்ற முதலமைச்சர் திராவிட மாடலின் நாயகர் மாண்புமிகு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், அவருடைய தந்தை கலைஞர் அவர்களுடைய எழுத்தில் விளைந்த ஒரே இரத்தம் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் சாதி ஒழிப்பு குறித்த மையக்கருத்து அடி நாதமாக இருக்கும். எப்போதுமே ஒரு கருத்தை செயற்கையாகவோ இயற்கையாகவோ நம்மீது வரித்துக்கொள்ளும்போது அதனால் ஏற்படும் விளைவுகள் அதிகம். 

நானும் கூட 8-ம் வகுப்பு படிக்கும் வரையில் திராவிட இயக்கம் என்றால் என்ன, பெரியார் யார், அண்ணா யார், கலைஞர் யார் என்று அறியாதவன்தான். ஏதோ ஓர் பேச்சு போட்டியில் கலந்துகொண்டேன். தமிழாசிரியர் எழுதிக்கொடுத்ததை பேசி பரிசு பெற்றேன். அதன் பிறகு தமிழ் மீது ஈடுபாடு வந்தது… பெரியாரை, அண்ணாவை, கலைஞரை அவர்கள் வாயிலாக சங்க இலக்கியத்தை திராவிட பண்புகளை எல்லாம் அறிந்தேன். 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராக 3 முறை ஒன்றிய அமைச்சராக இருந்தேன். அதில் மிகப்பெரிய சோதனை வந்தும், அதை எதிர்த்து நிற்கும் வலிமை உள்ளவனாக நின்றுகொண்டிருக்கிறேன். இந்த வலிமை, திராவிட இயக்கம் தந்திருக்கின்ற கலை, இலக்கியம், அரசியல் அளித்ததுதான்.

அந்த வரிசையில், முதலமைச்சர் அவர்கள் நடித்த ‘ஒரே இரத்தம்’ திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த படத்தின் கதை என்னவென்று கேட்டேன்… முன்வெளியிட்டு தகட்டை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். நான் முன்பே குறிப்பிட்டது போல கலை, இலக்கியம், ,காதல் வீரம் எல்லாம் தமிழர்களுக்கு என்று இருக்கின்ற தனி செம்மாந்த விழுமியங்கள்.

“எங்குற்றான் உந்தன் மகன் எனும் குரல் கேட்ட தாய்க்கிழவி, பொங்குற்ற துயரை அடக்கி, ‘புலி, போன இடம் நான்றியேன்; போர்க்களம்தான் போயிருக்கும்; புலி இருந்த குகை இதுதான்’ என்று தன் வயிற்றை சுட்டி காட்டிய தமிழ்” – என்று
கலைஞர் எழுதினார். அந்த கலைஞர் தான், ‘ஏறு தழுவுதல் ஆடவர்க்கு அழகு; அவர் வாயில் வெற்றிலை சாறு தடவுதல் மகளிர்க்கு அழகு’ என்று காதலையும் சொல்லி இருப்பார்.

அப்படி ‘காத்துவாக்குல ஒரு காதல்’ கதையை கேட்டபோது இரண்டு உண்மையான காதலர்கள் சந்திக்கின்ற தடையை, அதுவும் ஒரு குறிப்பிட்ட பூலோக பகுதியிலே இருக்கின்ற தடைகளை எல்லாம் தாண்டி வருகின்ற அந்த ஓட்டத்தை தந்திருப்பதாக சொன்னார்கள்.

சினிமாவாக இருந்தாலும், கலையாக இருந்தாலும், இலக்கியமாக இருந்தாலும் சமூகத்தில் இருக்கின்ற புழுக்கத்தை சமூகத்தில் இருக்கின்ற கொதிப்பை வெளியேகொண்டு வந்து அவற்றை தீர்க்க கூடிய தீர்க்கமான ஆயுதமாக இருக்க வேண்டுமென்று விரும்புகின்ற இயக்கம் திராவிட இயக்கம்.

உலகத்தில் இருக்கின்ற எத்தனையோ காதல் கதைகளை எல்லாம் சுருக்கி வைத்து பார்த்தால் இரண்டே இரண்டு விஷயம் தான். உன்னை நான் காதலிக்கிறேன் அல்லது நான் காதலித்துக் கொண்டே இருப்பேன். இதற்கு தான் இவ்ளோ பெரிய இலக்கியங்கள் எல்லாம்.

இன்றைக்கு இருக்கிற சாதியம், அரசியல், பொருளாதார வேறுபாடு, மதவெறி இவைகளை எதிர்த்து ஒரு காதல் வெற்றிபெற வேண்டுமென்றால் அதற்க்கு இளமை மட்டும் காரணம் அல்ல; அதையும் தாண்டி ஒரு மனப்பக்குவமும், புரிந்துகொள்ளுகின்ற ஆற்றலும் வேண்டும் என்கின்ற அந்த உணர்வோடு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன். அப்படிப்பட்ட ஒரு படம் வெற்றி பெறவேண்டுமென்று நான் விழைகிறேன். அதற்காக உழைத்த அத்தனை பெருமக்களையும் பாராட்டி, என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி வணக்கம்.”

ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயன் பேசியதாவது :

“என் நண்பர்களான அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகத்திற்க்கு வணக்கம், இப்படம் மிகப்பெரிய வெற்றியடையும். ஏனெனில் அறிமுக இயக்குநர்கள் பலரது படங்களில் நான் பணியாற்றி இருக்கிறேன். அத்தனையும் வெற்றி பெற்றன. அவர்கள் அனைவரும் இன்று மிகப்புரிய அளவில் வலர்ந்துள்ளார்கள். அதேப்போல் தம்பி மாஸ் ரவியும் இத்திரைப்படத்தின் மூலம் மிகப்பபெரிய வெற்றியடைவார்.

நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. இராசா அவர்கள் இங்கு வந்து வாழ்த்தியதே, இத்திரைப்படத்திற்க்கு மிகப்பெரிய வெற்றி. படத்தின் தயாரிப்பாளர் திரு. எழில் இனியன் அவர்கள் முழு வேகத்துடனும் புத்துணர்ச்சியுடனும் இப்படத்தில் பணியாற்றியுள்ளார். ஒரு உதவி இயக்குனர் போல் அனைத்து வேலைகளையும் முன் வந்து சிறப்பாக செய்தார். அவருக்கு என் மிகப்பெரிய பாராட்டுகள். படத்தின் பாடல்களும் , பின்னனி இசையும் மிகவும் சிறப்பாக வந்துள்ளன. மேலும் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய படத்தின் குழுவிற்க்கு வாழ்த்துக்கள்!”

இயக்குனர் சுப்ரமணிய சிவா பேசியதாவது :

“இந்தப் படத்தின் இயக்குநர் மாஸ் ரவி, எனது பல வருட நண்பன், என் தம்பி! அவர், மிகவும் கஷ்டமான சூழ்நிலைகள் பலவற்றை கடந்து வந்தவர். இத்திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகனாகவும் இயக்குனராகவும் களம் இறங்குவது மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் உள்ளது. அதற்கான களம் அமைத்துக் கொடுத்த வாய்ப்பளித்த சென்னை பிரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் திரு. எழில் இனியன் அவர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் சினிமாவில் தற்ப்போது இருக்கும் மாடர்ன் சண்டை காட்சிகளுக்கு எல்லாம் குரு திரு.சூப்பர் சுப்புராயன் அவர்கள் தான் . அவரும் இத்திரைப்படத்தில் இருப்பது மேலும் வெற்றியை உறுதி செய்து உள்ளது.

இயக்குனர் மாஸ் ரவி பேசியதாவது :

வருகை தந்திருக்ககூடிய பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம். சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. இராசா அவர்களுக்கும் நன்றி.
இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு. எழில் இனியன் அவர்கள் சினிமாவை மிகவும் நேசிப்பவர். அணு அணுவாக சினிமாவை ரசிப்பவர். நம்மை பின் தள்ள ஆயிரம் பேர் இருந்தாலும் நம்மை மேலே தூக்கிவிட வந்தவர் தான் என் தயாரிப்பாளர் திரு.எழில் இனியன் அவர்கள். பின் நான் 15 வருடமாக பயனிக்ககூடிய என் குரு இயக்குனர் திரு. சுப்ரமணிய சிவா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டண்ட் இயக்குனர் திரு. சூப்பர் சுப்புராயன் மாஸ்டர் அவர்களுக்கும் என் நன்றிகள், என்னை தன் மகன் போல அக்கரையுடன் பார்த்துக்கொண்டார்.இசையமைப்பாளர் ஜீ.கே.வி மற்றும் மிக்கின் அருள்தேவ் இருவருடைய உழைப்பும் படத்திற்க்கு மிக முக்கியமானது மற்றும் படத்தின் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.

இசையமப்பாளர் ஜீ.கே.வி பேசியதாவது :

அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம், படத்தின் தயாரிப்பாளர் திரு. எழில் இனியன் அவர்களுக்கு எனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்தமைக்கு உன்மையாக பணியாற்றியுள்ளேன். மேலும் இசையமைப்பாளர் திரு. மிக்கின் அருள் தேவ் அவர்கள் பணியாற்றி கொடுத்த ஒரு பாடல் மிகவும் சிறப்பாக வந்துள்ளது அவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நடிகர் ஆதித்யா கதிர்:

இயக்குனர் மாஸ் ரவி அவர்கள் நடிகராகவும் இயக்குனராகவும் அறிமுகமாவது, மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் உள்ளது. புதுமுகம், புது தொழில்நுட்ப கலைஞர்கள் இவர்களை நம்பி ஒரு வாய்ப்பு கொடுத்த சென்னை பிரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் திரு. எழில் இனியன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். மேலும் இத்திரைபடம் மிகப்பெரிய வெற்றியடைய படத்தின் குழுவிற்க்கு வாழ்த்துக்கள்.

மூவரின் ஜாமீன் மனு தள்ளுபடி: விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

விழுப்புரம்:

கழிவுநீர்த் தொட்டியில் குழந்தை விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூவரின் ஜாமீன் மனுக்களை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பள்ளியின் தாளாளர், பள்ளி முதல்வர், வகுப்பாசிரியர் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர்த் தொட்டியில் 3 வயது குழந்தை விழுந்து உயிரிழந்தது. இயற்கை உபாதையை கழிக்க கழிவறைக்குச் சென்றிருந்தபோது கழிவறைத் தொட்டி மூடி உடைந்து உள்ளே விழுந்துள்ளார்.

குழந்தை மீட்கப்பட்டு அருகிலுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. எனினும் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அஜாக்கிரதையாக செயல்பட்ட பள்ளி தாளாளர், பள்ளி முதல்வர், வகுப்பாசிரியர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இதனை இன்று (ஜன.8) விசாரித்த நீதிபதி மணிமொழி, மாலையில் தீர்ப்பு வழங்குவதாகக் கூறியிருந்தார். அதன்படி மாலையில் மூவரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

வைகுண்ட ஏகாதசி இலவச டோக்கன் பெற பக்தர்கள் தள்ளுமுள்ளு: 4 பேர் பலி !

திருப்பதி:

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி டோக்கன்களைப் பெற பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியிருந்ததால் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. வைகுண்ட ஏகாதசி வெள்ளிக்கிழமை(ஜன. 10) கொண்டாடப்படும் நிலையில், இதற்காக திருப்பதி உள்பட வைணவத் திருத்தலங்களில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இந்த நிலையில், திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி நாளில் சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கான சர்வ தரிசன டோக்கன்கள் விஷ்ணு நிவாசம் வளாகத்தில் வழங்கப்படுவதாக இருந்தது. இதை பெறுவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கே காத்திருந்தனர். அப்போது டோக்கன்களைப் பெற கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. நெரிசலில் காயமடைந்தோருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நெரிசலில் சிக்கி இன்னும் பலர் பலியாகியிருக்கக்கூடுமென அஞ்சப்படுகிறது. உயிரிழந்தோரில் தமிழக பக்தர்களும் இருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் விரிவன தகவல்களை தெரிவிப்பார்கள் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

சென்னை உணவுத் திருவிழா!

சென்னை:

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா, சென்னை மெரினா கடற்கரையில் கடந்த டிச.20 முதல் டிச.24-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த உணவுத் திருவிழா வெற்றி பெற்றதையொட்டி மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் வங்கிக் கடன் உதவிகள் வழங்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி, உணவுத் திருவிழாவில் சிறப்பாக செயல்பட்ட 138 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அதைத்தொடர்ந்து 180 சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 2,136 மகளிருக்கு ரூ.15.71 கோடி மதிப்பீட்டில் வங்கிக் கடன் இணைப்புகளையும் வழங்கினார்.

பின்னர் விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசியது:

“சென்னையில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் 300 சுய உதவிக் குழுக்களை சேர்ந்த மகளிர் பங்கேற்று, உணவுகளை விற்பனை செய்தனர். மக்களின் நீண்ட வரிசையில் நின்று உணவுகளை வாங்கி சென்று ருசித்தனர். அந்தளவுக்கு பொதுமக்களின் பாராட்டை பெற்ற சென்னை உணவுத் திருவிழா மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இத்திருவிழாவுக்கு மொத்தம் 3.5 லட்சம் பேர் வருகை தந்திருந்தனர். மொத்தம் ரூ.1.55 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.

அந்த வகையில் மெரினாவில் வருகின்ற கடல் அலையை விட, உணவுத் திருவிழாவுக்கு வருகை தந்த மக்கள் தலைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இந்த வெற்றி சுய உதவிக் குழுவினரின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகும். இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான மகளிர் தொழில்முனைவோரை அரசு உருவாக்கியிருக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழாவை, மெரினாவில் பெரியதாக, அதிகமான அரங்குகளுடன் பிரம்மாண்டமாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என அவர் கூறினார்.

இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்பி, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திவ்யதர்ஷினி, செயல் இயக்குநர் ஸ்ரேயா பி.சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நடிகர் விஷாலுக்கு கை நடுக்கம்! ஏன்?!

சென்னை: 

விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம், சோனு சூட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மதகஜராஜா’. ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மதகஜராஜா’ திரைப்படம் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகிறது. இதன் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விஷாலின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. கையில் மைக்கை பிடித்து அவரால் பேசவே முடியவில்லை. கை நடுங்கிக் கொண்டே இருந்தது. ‘மதகஜராஜா’ விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் விஷாலின் உடல்நிலையைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

விஷால் முழுமையாக பேசி முடித்தவுடன், நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி “விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல். படத்தின் விளம்பர நிகழ்வுக்கு கடும் காய்ச்சலுடனே வந்துள்ளார்” என்று தெரிவித்தார். விஷால் கை நடுக்கத்துடன் பேசும் வீடியோ பதிவு, இணையத்தில் பெரும் வைரலானது. பலரும் விஷால் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

உடலை சீராக வைக்க பவுடர், ஊசி போட்டதால் தான் இப்படி ஆகிவிட்டார் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். உண்மை விஷாலுக்கு தான் தெரியும்.