இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் முதல் முறையாக கதை ஆசிரியராக உருவெடுத்துள்ள ’99 சாங்ஸ்’ திரைப்படம் முழுக்க முழுக்க இசையை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ளது. மகனின் இசை ஆர்வத்திற்கு எதிராக உள்ள தந்தையின் தடைகளை மீறி, இசை பயிலும் நாயகன் தான் காதலிக்கும் பெண்ணின் தந்தை விடுத்த சவாலை ஏற்றுக்கொண்டு உலகை உலுக்கும் ஒரு பாடலை உருவாக்க மேற்கொள்ளும் பயணமும், அதனைத் தொடர்ந்து ஏற்படும் விபத்துக்களும் திரைப்படமாக உருவாகியுள்ளது.
தமிழ், இந்தி என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் என்பதால் படம் முழுக்க வட இந்திய முகங்கள் நிரம்பி இருப்பது திரைப்படத்தை, தமிழ்திரை ரசிகர்கள் தங்களோடு பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியாமல் போவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. படம் நெடுக கதாபாத்திரங்கள் ஜிமி ஹென்றிக்ஸ் இடக்கையில் கிட்டார் வாசிப்பரா? வல கையில் கிட்டார் வாசிப்பாரா? என்றும், ஜாஸ் இசையில் உள்ள இசைக்குறிப்புகளை வசனங்களாக பேசிக் கொண்டும் இருப்பதால் படம் இசை துறையை சேர்ந்தவர்களை தவிர, வேறு யாருக்கும் புரியாத சூழ்நிலை எட்டுகிறது.
வாய் பேச முடியாத நாயகி கதாபாத்திரம், நாயகனுக்கு இசை ஆர்வம் ஏற்பட நாயகனின் தாய் ஒரு இசைக்கலைஞர் என்பதை பிளாஷ்பேக்கில் சொல்லியிருப்பது என ஏ.ஆர் ரகுமான் தனது கதையில் சுவாரசியங்களை சேர்க்க முயற்சி செய்திருந்தாலும், அந்த சுவாரசியங்கள் ரசிகர்களை எந்த வகையிலும் உற்சாகம் அடைய செய்யாதது ஏமாற்றமாக உள்ளது.
தாளம் உள்ளிட்ட திரைப்படங்களை ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்காக மட்டுமே திரைப்படம் பார்த்த ரசிகர்களுக்கே, 99 சாங்ஸ் திரைப்படத்தில் நிரம்பியிருக்கும் ஜாஸ் இசை உற்சாகத்தை கொடுக்குமா என்பது சந்தேகமே. எனினும் இசை பயிலும் மாணவர்களுக்கும் இந்தத் திரைப்படம் ஒரு பயிற்சி வகுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.