தமிழ்நாட்டிற்கு அதிக மழை கொடுப்பது வடகிழக்கு பருவமழை தான். கடந்த ஆண்டு நவம்பர் 18 ஆம் ஆண்டு தொடங்கிய மழை இந்த ஆண்டு அக்டோபர் மாதமே தொடங்கி விட்டது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் , பல்வேறு மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
சென்னையில் இரவு முதல் ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில், ரிப்பன் மாளிகையில் பேரிடர் மேலாண்மை அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகள், நீர்வழிக் கால்வாய்கள், ஏரிகள் மற்றும் கடல் முகத்துவாரங்களில் 68 கண்காணிப்பு கேமராக்கள் மூலம், கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்படுகிறது.
அத்தோடு 38 இடங்களில் வெள்ள சென்சார்கள் அமைக்கப்பட்டு அதன் விவரங்களும் இங்கு கண்காணிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவமழைக் காலங்களில் பொதுமக்கள் புகார்களைத் தெரிவிக்க 10 இணைப்புகளுடன் கூடிய 1913 உதவி எண் கொடுக்கபட்டுள்ளது.