சென்னை போரூரில் ராமநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிலர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். அதில் சிலர் தங்கள் வீடுகளுக்கு முன்புறம் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டு உள்ளனர். இவ்வாறு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்த கடையின் உரிமையாளர்கள் சரிவர வாடகை பணம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் முன்னறிவிப்பு நோட்டீஸ் எதுவும் கொடுக்காமல் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீரென வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்க வந்தனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. வியாபாரிகள் எதிர்ப்பையும் மீறி போலீஸ் பாதுகாப்புடன் வாடகை செலுத்தாத 50-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் திடீரென போரூர்-குன்றத்தூர் சாலையில் அமர்ந்தும், சாலையில் படுத்து கொண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்த வியாபாரிகளை போலீசார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து இழுத்துச்சென்று கைது செய்தனர். கைதான அனைவரையும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். வியாபாரிகள் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, கைதான வியாபாரிகளை நேரில் சந்தித்து பேசினார்.

பின்னர் நிருபர்களிடம் விக்கிரமராஜா கூறியதாவது:-

கைது செய்யப்பட்ட வியாபாரிகளை எந்த வழக்கும் இல்லாமல் விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். குடியிருப்பு வாசிகள்தான் கடைகளை கட்டி கொடுக்கிறார்கள். அதில் வியாபாரிகள் வாடகை கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். இது சம்பந்தமாக திங்கட்கிழமை அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் கமிஷனரை சந்தித்து முறையிட உள்ளோம். இது போன்ற பிரச்சினை தமிழக முழுவதும் உள்ளது. அரசு ஒத்து கொள்ளவில்லை என்றால் வணிகர்களை பாதுகாக்க போராட்டம் நடத்துவதற்கும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here