வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு இலவச புடவைகள் வழங்கும் விழாவிற்காக டோக்கன்களை பெற வந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலியாகினர். 12 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தை மைதானம் அருகில் ஐயப்பன் என்பவர் ஜல்லி நிறுவனம் நடத்தி வருகிறார். நிறுவனத்தின் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக தைப்பூசத்தன்று இலவச புடவைகள் வழங்கி வருகின்றார். இந்நிலையில் நாளை தைப்பூசத்தை முன்னிட்டு இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற  உள்ளது. 

இதற்காக இன்று டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. டோக்கன்கள் பெற சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் நிறுவனத்தின் நுழைவாயிலில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது டோக்கன் வினியோகம் செய்ய நிறுவனத்தின் கேட் திறக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் இருந்த பெண்கள் முண்டியடித்து உள்ளே சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 16 பேர் பெண்கள் மயக்கம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருவாய் துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மயக்கம் அடைந்த பெண்களை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் குரும்பட்டி பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் (60), ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்த நாகம்மாள் (60), அரபாண்ட குப்பம் பகுதியை சேர்ந்த ராஜாத்தி (60) மற்றும் பழைய வாணியம்பாடியைச் சேர்ந்த மல்லிகா(65) என நான்கு மூதாட்டிகள் சிகிச்சை பலனியின்றி பலியாகினர். 12 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார், நகர திமுக செயலாளர் சாரதிக்குமார் ஆகியோர் நேரில் சென்று சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஐயப்பனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இலவச புடவை வழங்கும் விழாவிற்காக டோக்கன் பெற முண்டியடித்துக் கொண்டு கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பேர் பலியான சம்பவம் பெரும் வேதனை அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here