காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 33 வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் ரவி தலைமையில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது.
கடந்த 2017 -18 கல்வி ஆண்டு முதல் 2022 கல்வி ஆண்டு வரை தொடர்ந்து மூன்று வருடங்கள் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்ததால் மாணவ, மாணவிகள் பட்டங்கள் பெற முடியாமல் இருந்தனர்.
இந்நிலையில் இன்று பட்டமளிப்பு விழா அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையேற்று மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். ஒரு இலக்கிய முனைவர் பட்டமும், நான்கு அறிவியல் முனைவர் பட்டமும், 647 பேர் முனைவர் பட்டமும் (Ph.D)பெற்றனர். மேலும் பல்வேறு துறைகளில் பயின்ற மாணவர்கள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் பயின்றவர்கள் என கடந்த 3 ஆண்டுகளில் பட்டம் பெறாத 1,09,616 மாணவ, மாணவியர்கள் பட்டங்களை பெற்றனர்.
இவ்விழாவில் மத்திய கல்வி அமைச்சரும், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சருமான தர்மேந்திர பிரதான் முதன்மை விருந்தினராகவும், தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பனும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் தங்களது பேராசிரியர்கள், பெற்றோர்கள்,உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
– S.கல்கீஸ்வரன்- சிவகங்கை நிருபர்