மத்திய சென்னை தயாநிதி மாறன் வெற்றி!
மத்திய சென்னையில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 2.4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பாஜக சார்பில் போட்டியிட்ட வினோஜ் 1,69,159 வாக்குகள் பெற்ற நிலையில் தயாநிதி மாரன் 4,13,848 வாக்குகள் பெற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.
திண்டுக்கல் 4.4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் சிபிஐஎம் வெற்றி!
சிபிஐஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் ஒட்டுமொத்தமாக 6,70,149 வாக்குகள் பெற்று திண்டுக்கல் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் அதிமுக வேட்பாளர் முகமது முபாரக் 2,26,328 வாக்குகள் பெற்றுள்ளார்.
அபரிதமான வாக்கு வித்தியாசத்தில் சச்சிதானந்தம் வெற்றி பெற்றுள்ளார். 58.29 சதவிகிதம் வாக்குகள் அவருக்கு பதிவாகியுள்ளன.
காஞ்சிபுரம் திமுக வெற்றி!
காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் க. செல்வம் 2.21 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக 5,86,044 வாக்குகள் அவர் பெற்றுள்ளார்.
அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 3,64,571 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்துள்ளார்.
இரவு 8 மணி வெற்றி நிலவரம்!
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் எண்ணப்பட்டு வருகின்றது.
சூரத் மக்களவைத் தேர்தலில் ஏற்கெனவே போட்டியின்றி பாஜக வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது பாஜக 130, காங்கிரஸ் 55 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தில்லி பாஜக தலைமையகத்தில் மோடி!
பாஜக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை வகித்துவரும் நிலையில் பிரதமர் மோடி தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்றுள்ளார். பாஜக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
அயோத்தி உள்ள ஃபைசாபாத்தொகுதியை இழந்தது பாஜக!
அயோத்தி அமைந்துள்ள உத்தரப் பிரதேசத்தின் ஃபைசாபாத் தொகுதியில் சமஜ்வாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் 54,567 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளரான லல்லு சிங் தோல்வியை தழுவியுள்ளார்.
நாகப்பட்டினத்தில் வெற்றியை பதிவு செய்த சிபிஐ!
நாகப்பட்டினம் தொகுதியில் சிபிஐ கட்சி வேட்பாளர் செல்வராஜ் 2,08,957 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
திருச்சியில் மதிமுக வெற்றி!
திருச்சி தொகுதியில் மதிமுக கட்சி சார்பில் போட்டியிட்ட துரை வைகோ 3,13,094 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
வரலாற்று வெற்றி இது!
தேசிய ஜனநாயகக் கூட்டணி பெருவாரியான இடங்களில் முன்னிலை பெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, தொடர்ந்து 3-வது முறையாக தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்திய வரலாற்றில் இது ஒரு வரலாற்று சாதனை. மக்களின் அன்பிற்கு அடிபணிகிறேன். மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், கடந்த 10 ஆண்டு நல்லாட்சி தொடரும் எனப் பதிவிட்டுள்ளார்.
கனிமொழி வெற்றி!
தூத்துக்குடியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனிமொழி 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.