வேலையின்மை பிரச்சனை அதிகரித்துள்ளது: இந்திய நிறுவனங்களின் விண்ணப்பம்?!
வாஷிங்டன் :
அமெரிக்காவில், ‘எச் – 1பி’ விசாவுக்காக, இந்திய நிறுவனங்கள் சமர்ப்பித்த பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.அமெரிக்காவில், கொரோனா வைரஸ் பாதிப்பால், வேலையின்மை பிரச்சனை அதிகரித்துள்ளது.
அமெரிக்க இளைஞர்களின் நலனை கருத்தில் வைத்து, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, ‘எச் – 1பி விசா’ க்களை, இந்த ஆண்டு இறுதி வரை வினியோக்க தடை விதித்து, அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார்.
புதிதாக விண்ணப்பிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.இந்நிலையில், எச் – 1பி விசாவுக்காக, இந்திய நிறுவனங்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்கள், இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில், அதிக அளவில் நிராகரிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதன்படி, ‘டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்’ நிறுவனத்தின், 15 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ‘டெக் மஹிந்திரா’ நிறுவனத்தில், 30 சதவீதம்; எல் அண்ட் டி நிறுவனத்தில், 26 சதவீதம்; இன்போசிஸ் நிறுவனத்தில், 58 சதவீதம்; காக்னிசன்ட் நிறுவனத்தில், 48 சதவீத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
எனினும், ‘அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் பேஸ்புக்’ போன்ற அமெரிக்க நிறுவனங்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்களில், 10 சதவீதத்திற்கும் குறைவான விண்ணப்பங்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.