திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள சூரவாரிகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் நகுல் (வயது 12). இவர் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த குப்பன் என்பவரின் மகன் கோபி சந்த் (13). இவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர்கள் இரண்டு பேரும் ஒரே பள்ளியில் படித்ததால் நண்பர்களாக பழகி வந்தனர். இவர்கள் 2 பேருக்கும் கண் வலி ஏற்பட்டதால் பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் திடீரென மாயமானார்கள். உறவினர்கள் அவர்களை பல இடங்களில் தேடியும் 2 பேரும் ஒரே சைக்கிளில் சென்ற தகவல் தவிர வேறு எந்த தகவலும் தெரியவில்லை. இதையடுத்து நேற்று சூரவாரிகண்டிகை அடுத்த பூவலம்பேடு கிராமம் திடீர் நகர் பகுதியில் உள்ள கிணற்றில் இருவரும் பிணமாக மிதப்பதாக பெற்றோர்களுக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்று பார்த்தபோது தங்களது உடைகளை சைக்கிளில் கழற்றி வைத்து விட்டு சிறுவர்கள் கிணற்றில் இறங்கி குளித்தபோது நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் கும்மிடிப்பூண்டி போலீசார் மற்றும் தேர்வாய் கண்டிகை தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இறங்கி இருவரது உடல்களையும் மீட்டனர். பின்னர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் குளிக்க சென்ற சிறுவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சூரவாரிகண்டிகை கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here