சேலம் மாவட்டம் கணபதி பாளையம் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் மகன் ரமேஷ்குமார் (35) மற்றும் சேலம் மாவட்டம் மோகனகுமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த மல்லிராஜா மகன் சதீஷ்குமார் (40) ஆகிய இருவரும் சேலம் பத்மாவதி காலணியில் “விக்டரி மேன் பவர்” என்ற பெயரில் உள்ள நிறுவனம் மூலம் வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாக ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளனர். இதனை நம்பி தூத்துக்குடி பொன்சுப்பையா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் செல்வகுமார் (31) என்பவர் மேற்படி இருவரையும் செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர்கள் செல்வகுமாரை பிரான்ஸ் நாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகவும் அதற்கு ரூபாய் 4,70,000/- பணம் செலவாகும் என்றும் அதற்கு முன்பணமாக 70 ஆயிரம் பணம் செலுத்தினால் ஒரு மாதத்திற்குள் விசா வழங்கப்படும் என்றும் விசா வழங்கியவுடன் மீதமுள்ள தொகையை செலுத்தினால் போதும் என நம்பிக்கை வார்த்தைகள் கூறி செல்வகுமாரின் மொபைல் G Pay மூலம் மேற்படி ரமேஷ்குமாரின் வங்கி கணக்கிற்கு கடந்த 27.07.2022 அன்று ரூபாய் 10,000/- பணமும், அதேபோன்று கடந்த 04.08.2022 அன்று ரூபாய் 60,000/- பணம் என மொத்தம் ரூபாய் 70 ஆயிரம் பெற்றுக்கொண்டு ஒரு மாதத்தில் விசா தருவதாக மேற்படி இருவரும் கூறியுள்ளனர்.
 
 
இதனையடுத்து இரண்டு மாதம் ஆகியும் விசா வராததால் செல்வகுமார் சந்தேகம் அடைந்து மேற்படி இரண்டு பேரையும் தொடர்பு கொண்ட போது அவர்கள் செல்வகுமாரின் வங்கி கணக்கிற்கு பணத்தை திருப்பி அனுப்புவதாக கூறி ஏமாற்றியுள்ளனர். அதனைத் தொடர்ந்து கடந்த 22.12.2022 அன்று செல்வகுமார் நேரில் சென்று மேற்படி ரமேஷ்குமார் மற்றும் சதீஷ்குமாரிடம் பணத்தை கேட்டபோது அவர்கள் இருவரும் செல்வகுமாரிடம் பணம் தர முடியாது என்று கூறியதுடன்  கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
 
இது குறித்து மேற்படி செல்வகுமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகாரளித்துள்ளார். மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன்  மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம்  உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. அந்தோணியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர்  அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள்  ராஜ்குமார்,  ஸ்டீபன் டேவிட் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு  ரமேஷ்குமார் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here