திருநெல்வேலி அருகே ராமையன்பட்டி பகுதியில் வேன் கவிழ்ந்த விபத்தில் பச்சிளங்குழந்தைகள் உள்பட 13 பேர் பலத்த காயமடைந்தனர்.
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பேட்டை ரஹமத் நகர் பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க ராஜபாளையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 3) காலை புறப்பட்டனர்.
ராமையன்பட்டி அருகே திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை கடந்து சங்கரன்கோவில் சாலையில் வேன் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் மும்தாஜ் ( 33 ), அப்துல்லா ஷேக்(30), மீரான் (8), பீர் பாத்தி( 60), பீர் மைதீன் (59), மைதீன் அப்துல் காதர் (63 ), முகமது ரியாஸ் (2), அகமது அஜ்மல் ( 2), கோதை (3), நூர்ஜகான் பீவி ( 85) உள்பட 13 பேர் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து மானூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.