”சென்னையில் வழங்கப்பட்டுள்ள, 1,000 ரூபாய் பஸ் பாஸ்களை, அடுத்த மாதம், 15ம் தேதி வரை பயன்படுத்தலாம்,” என, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், நேற்று முதல், 50 சதவீத பயணியருடன் பஸ்கள் இயக்கம் தொடங்கியது.ரூ.1,200 கோடி மானியம்பஸ்கள் இயக்கத்தை நேற்று காலை, சென்னை பல்லவன் இல்ல பணிமனையில், போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு செய்தார்.பின், அவர் அளித்த பேட்டி:சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், 1,792 பஸ்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து கழகத்தில், 85 சதவீத ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்;
மீதமுள்ளோருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பயணியர் முக கவசம் அணிந்து பயணிக்க வேண்டும். மகளிர், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் பஸ்களில் இலவசமாக பயணிக்க, அரசு, 1,200 கோடி ரூபாய் மானியம் வழங்குகிறது.
இலவச பயணத்திற்கான டிக்கெட்டுகள் வெவ்வேறு வண்ணங்களில் அச்சடிக்கப்பட்டுள்ளன; 23ம் தேதி முதல் வழங்கப்படும். இலவச பயணத்தின் போது, தங்களின் அடையாள அட்டை வைத்திருப்பது அவசியம்.கட்டண உயர்வு இல்லைவிழுப்புரம் போக்குவரத்து கழகத்தின் சார்பில், 750 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பயணியரின் தேவைக்கேற்ப, கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், மே, 16 முதல் ஜூன், 15 வரை பயணிக்கும் வகையில், 2,300 பேர், 1,000 ரூபாய் பஸ் பாஸ் பெற்றுள்ளனர். அவர்கள், அதே பாசை பயன்படுத்தி, ஜூலை, 15 வரை பயணிக்கலாம்.முதல்வர் அனுமதி கிடைத்ததும், சாதாரண பஸ்களுக்கு தனி வண்ணம் பூசும் பணி தொடங்கும்.
டீசல் விலை உயர்ந்தாலும், கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை. போக்குவரத்து துறை மிகச் சிறந்த சேவைத் துறையாக விரைவில் மாறும்.இவ்வாறு ராஜகண்ணப்பன் கூறினார்.நிகழ்வில், போக்குவரத்து துறை செயலர் தயானந்த் கட்டாரியா, மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம்.அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஜோசப் டையஸ், போக்குவரத்துத்துறை தலைவர் அலுவலக தனி அலுவலர் திருவாம்பளம் பிள்ளை ஆகியோர் பங்கேற்றனர்.